குடிநீர் வழங்கக்கோரி காலி குடங்களுடன் கிராம மக்கள் சாலை மறியல்


குடிநீர் வழங்கக்கோரி காலி குடங்களுடன் கிராம மக்கள் சாலை மறியல்
x
தினத்தந்தி 3 Aug 2018 3:26 AM IST (Updated: 3 Aug 2018 3:26 AM IST)
t-max-icont-min-icon

குறிஞ்சிப்பாடி அருகே குடிநீர் வழங்கக்கோரி காலி குடங்களுடன் கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

குறிஞ்சிப்பாடி, 



குறிஞ்சிப்பாடி அருகே உள்ள கோரணப்பட்டு மற்றும் சத்திரம் கிராமத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டு, அதில் இருந்து மின்மோட்டார் மூலம் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிக்கு குடிநீர் ஏற்றப்படுகிறது. பின்னர் அங்கிருந்து கிராம மக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது.

கடந்த 2 ஆண்டுகளாக கோரணப்பட்டு மற்றும் சத்திரம் கிராமத்தில் தினமும் காலையில் 1 மணி நேரம் மட்டுமே குடிநீர் வினியோகிக்கப்பட்டு வருகிறது. அந்த தண்ணீர் பொதுமக்களுக்கு போதுமானதாக இல்லை.

இதற்கிடையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மின்மோட்டார் பழுதானதால், குடிநீர் வினியோகம் முற்றிலும் பாதிக்கப்பட்டது. இதனால் கிராம மக்கள் தங்களது அன்றாட தேவைக்கு கூட தண்ணீர் கிடைக்காமல் மிகுந்த அவதிக்குள்ளாகி வருகின்றனர். மேலும் அருகில் உள்ள விவசாய நிலங்களுக்குசென்று அங்குள்ள கிணற்றில் தண்ணீர் எடுத்து வந்து பயன்படுத்தி வந்தனர்.

இது குறித்து நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தபட்ட துறை அதிகாரிகளிடம், கிராம மக்கள் பல முறை மனு கொடுத்தும் மின்மோட்டாரை சரிசெய்து, குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கவில்லை.

இதனால் ஆத்திரம் அடைந்த கோரணப்பட்டு, சத்திரம் கிராம மக்கள் நேற்று காலை காலி குடங்களுடன் சத்திரம் பஸ் நிறுத்தம் அருகே திரண்டனர். பின்னர் அவர்கள், குறிஞ்சிபாடி- நடுவீரப்பட்டு, குள்ளஞ்சாவடி-கொள்ளுக்காரன் குட்டை நான்கு முனை சந்திப்பில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த வழியாக வாகனங்கள் செல்ல முடியாமல் நீண்டதூரம் அணிவகுத்து நின்றன.

இது குறித்து தகவல் அறிந்ததும் குறிஞ்சிப்பாடி வட்டார வளர்ச்சி அலுவலர் அசோக்பாபு, குள்ளஞ்சாவடி இன்ஸ்பெக்டர் பாண்டியன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மறியலில் ஈடுபட்ட கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது கிராம மக்கள், மின்மோட்டாரை சரிசெய்து காலை மற்றும் மாலையில் குடிநீர் வினியோகம் செய்ய வேண்டும் என்ற கூறினர். அதற்கு வட்டார வளர்ச்சி அலுவலர் அசோக்பாபு, மின்மோட்டாரை சரி செய்து உடனடியாக குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தார். இதையடுத்து கிராம மக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்த சென்றனர். இந்த மறியலால் அந்த பகுதியில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 

Next Story