மாமல்லபுரம் கடற்கரை கோவிலை பாதுகாக்க சுற்றிலும் சவுக்கு மரங்கள் தொல்லியல் துறை நடவடிக்கை
மாமல்லபுரம் கடற்கரை கோவிலை பாதுகாக்க சுற்றிலும் சவுக்கு மரங்கள் நட்டும் கற்களை கொட்டியும் தொல்லியல் துறை பாதுகாத்து வருகிறது.
மாமல்லபுரம்,
காஞ்சீபுரம் மாவட்டம், மாமல்லபுரத்தில் உள்ள கடற்கரை கோவில் யுனெஸ்கோவால் அங்கீகரிக்கப்பட்ட உலக பாரம்பரிய சின்னமாக உள்ளது. 7-ம் நூற்றாண்டில் மாமல்லபுரத்தில் ஆட்சி செய்த 2-ம் நரசிம்ம வர்ம பல்லவ மன்னனால் இந்த கோவில் கருங்கல்லால் கட்டப்பட்டது.
2 விமானங்களுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. அதில் ஒன்று சத்திரியாசிம்மேஸ்வரம் என்றும் மற்றொன்று ராஜசிம்மேஸ்வரம் என்றும் அழைக்கப்படுகிறது.
இயற்கை பேரிடரை தாங்கும் வகையில்
இந்த கோவிலின் 2 விமானங்களும் கிழக்கு, மேற்கு நோக்கி அமைந்துள்ளது. சிவனும், விஷ்ணுவும் இந்த கோவிலின் 2 கருவறையில் வீற்றிருப்பது மற்றொரு சிறப்பம்சமாகும். எந்தவித தொழில்நுட்ப வசதியும் இல்லாத 7-ம் நூற்றாண்டில் இந்த கோவில் கோபுரத்தில் எல்லா இயற்கை பேரிடரையும் தாங்கும் வகையில் கலசம் வைத்து கோவிலை கட்டினர்.
பாரம்பரிய சின்னங்கள்
மாமல்லபுரம் வரும் வெளிநாட்டு, உள்நாட்டு பயணிகள் இந்த கோவிலின் அழகை ரசித்து புகைப்படம் எடுத்து செல்வதுண்டு. இளம்பெண்கள், கல்லூரி மாணவிகள் செல்பி எடுத்து மகிழ்வதுண்டு. குறிப்பாக வட இந்தியாவில் தாஜ்மகாலும், தென் இந்தியாவில் கடற்கரை கோவிலும் முக்கியத்துவம் பெற்ற பாராம்பரிய சின்னங்களாக உள்ளன.
இந்தியாவுக்கு அரசு முறைப்பயணமாக வரும் வெளிநாட்டு அதிபர்கள், வெளிநாட்டு பிரதமர்கள், தூதர்கள் பலர் மாமல்லபுரம் வந்து இந்த கோவிலை கண்டு களித்து விட்டு செல்வது வழக்கம். மறைந்த இந்திரா காந்தி பிரதமராக இருந்தபோது 1975-ம் ஆண்டு மாமல்லபுரம் வந்தபோது இந்த கோவிலின் மகத்துவத்தை உணர்ந்து இதனை பாதுகாக்க மத்திய அரசுக்கு அப்போது உத்தரவிட்டார். அப்போது கடற்கரை ஓரம் முழுவதும் கற்கள் கொட்டி கடல் அலை இந்த கோவிலுக்குள் வராதபடி பாதுகாக்கும் பணி தொடங்கப்பட்டது.
பிறகு அப்போதிருந்து இந்த கோவிலை கடல் அரிப்பில் இருந்தும், உப்புக்காற்று அரிக்காமல் இருப்பதற்கும் மத்திய தொல்லியல் துறை பல்வேறு தடுப்பு முறைகளை செய்து பாதுகாத்து வருகிறது. குறிப்பாக கடற்கரை கோவில் பின்புறம் கடல் நீர் உட்புகுந்து அரிக்காமல் இருப்பதற்கு அரண் போல் இந்த கோவிலை சுற்றி ஏராளமாக கற்களை கொட்டி பாதுகாத்து வருகிறது. கற்கள் கொட்டப்பட்டதால் கடல் அலை இந்த கோவிலுக்குள் புகாமல் தடுக்கப்பட்டுள்ளது. தடுப்புச்சுவரும் வேலியும் ஒரு புறம் அமைக்கப்பட்டது.
ரசாயன கலவை
உப்பு காற்றில் இருந்து பாதுகாக்க தற்போது ஆண்டு தோறும் ரசாயன கலவை பூசியும் பாதுகாக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக தொல்லியல் துறை சர்வதேச அளவில் கட்டிடக்கலை நிபுணர்கள் மற்றும் பொறியாளர்களின் ஆலோசனைகளை கேட்டறிந்து கடல் காற்று, உப்பு படிமங்களில் இருந்து பாதுகாக்கிறது.
உப்பு காற்று அரித்ததால் இந்த கோவிலை சுற்றி அழகாக காட்சி அளித்த நந்தி சிற்பங்கள் தற்போது உருவ அமைப்புகள் மாறி எலும்பு கூடு போல காட்சி அளிக்கிறது. கோவில் சுவர்களில் இருந்த தசாவதார காட்சிகளுடன் கூடிய சிற்பங்களும் உப்பு காற்றினால் அரிக்கப்பட்டு அது இருந்த இடம் தெரியாமல் போய்விட்டது.
உப்பு படிமங்கள்
இதனையடுத்து தொல்லியல் துறை உலக பாரம்பரியம் மிக்க இந்த கலை பொக்கிஷத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து 6 மாதங்களுக்கு ஒரு முறை ரசாயன கலவை பூசி உப்பு படிமங்களை அகற்றி வருகிறது. கோவிலை சுற்றிலும் தற்போது அதிக அளவில் சவுக்கு மரங்களை நட்டு அரண் போல் பாதுகாத்து வருகிறது. கோவிலின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு இரண்டு கோபுரங்களின் கருவறைகுள் சுற்றுலா பயணிகளும் தற்போது அனுமதிக்கப்படுவதில்லை. மனிதர்கள் சுவாசிக்கும் காற்று மாசினாலும் இந்த கோவில் மாசடைய வாய்ப்பு உள்ளதாக இருப்பதால் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.
மேலும் இந்த கோவில் வளாகத்தில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்துவதற்கும், சிகரெட் பிடிப்பதற்கும் தொல்லியல் துறை தடைவிதித்துள்ளது. மாமல்லபுரம் கடற்கரை வளாகத்தில் பல்லவர்கள் உருவாக்கிய 7 கோவில்கள் இருந்ததாகவும், 6 கோவில்கள் கடலில் மூழ்கி விட்டதாகவும் இந்த கோயில் மட்டுமே கடல் சீற்றம், கடல் அரிப்பில் இருந்து தப்பி உள்ளதாகவும் கூறப்படுகிறது. கடந்த 2004-ல் ஆண்டு ஏற்பட்ட சுனாமியின் போதும் ராட்சத அலைகள் இந்த கோவிலுக்குள் புகுந்தும் எந்தவித சிறு சேதமும் ஏற்படாமல் இந்த கோவில் கம்பீரமாக நின்று கொண்டிருக்கிறது. அப்போது முதல் தொல்லியல் துறை மிகுந்த கவனத்துடன் இந்த கோவிலை பாதுகாத்து வருகிறது.
அதிக கவனம்
14-ம் நூற்றாண்டுக்கு முன் இந்த கோவிலில் உள்ள விஷ்ணு, சிவன் கருவறையில் வழிபாட்டு முறை இருந்ததாகவும் கூறப்படுகிறது.
அடுத்த தலைமுறையினரும் கண்டுகளிக்கும் வகையில் இந்த கோவிலை மத்திய தொல்லியல் துறை அதன் முக்கியத்துவத்தை உணர்ந்து கூடுதல் கவனம் செலுத்தி பாதுகாக்க வேண்டும் என்பதே பொதுமக்கள், சுற்றுலா பயணிகள், சமூக ஆர்வலர்களின் கருத்தாக உள்ளது.
Related Tags :
Next Story