இன்டர்நெட் மூலம் மலர்ந்த காதல்: வெளிநாட்டுக்காரரை கரம்பிடித்த கடலூர் பெண்
இன்டர்நெட் மூலம் காதல் மலர்ந்ததால் வெளிநாட்டுக்காரரை கடலூர் பெண் கரம்பிடித்தார். இவர்களது திருமணம் விருத்தாசலம் கோவிலில் இந்து மத முறைப்படி நடந்தது.
விருத்தாசலம்,
கடலூரில் உள்ள தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில் வசிப்பவர் குணசேகரன்(வயது 65). இவருடைய மனைவி மணிமேகலை(60). ஓய்வுபெற்ற ஆசிரியை. இவர்களுக்கு சாருலதா(32) என்ற மகள் உள்ளார். பி.இ. பட்டதாரி.
செக்குடியரசு நாட்டில் உள்ள உஸ்டி நட் லெபம் என்ற நகரத்தை சேர்ந்தவர் தாமஸ் ரோசன்கிரான்ஸ்-வேதா தம்பதியரின் மகன் தாமஸ் லூகாஸ் ரோசன் கிரான்ஸ்(40). தொழில்நுட்ப வல்லுநர். சாருலதாவும், தாமஸ் லூகாஸ் ரோசன் கிரான்சும் கடந்த 2015-ம் ஆண்டு இன்டர்நெட் மூலம் அறிமுகமானார்கள். அதன்பிறகு நண்பர்களான இருவரும், இன்டர்நெட் மூலம் பேசி பழகி வந்தனர். இதையடுத்து சாருலதா தன்னை நேரில் பார்க்க வருமாறு தாமசிடம் கூறினார். அதன்படி தாமஸ், கடலூருக்கு வந்து சாருலதாவை சந்தித்தார். இங்குள்ள கலாசாரம், உணவு, பழக்க வழக்கங்கள் தாமசுக்கு பிடித்து விட்டது.
இதனை தொடர்ந்து சாருலதா செக்குடியரசு நாட்டிற்கு சென்றார். அங்குள்ள ஒரு பள்ளிக்கூடத்தில் சாருலதாவிற்கு ஆசிரியை வேலை கிடைத்தது. இதையடுத்து அவர் அங்கு பணிபுரிந்து வந்தார். அந்தசமயத்தில் சாருலதாவும், தாமசும் அடிக்கடி சந்தித்துக்கொண்டனர். இந்த பழக்கம் நாளடைவில் அவர்களுக்குள் காதலாக மலர்ந்தது.
இது பற்றி சாருலதா, தனது பெற்றோரிடம் தெரிவித்தார். முதலில் அவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அதன்பிறகு அவர்களது காதலுக்கு சம்மதம் தெரிவித்தனர். இதையடுத்து கடந்த மார்ச் மாதம் 23-ந் தேதி சாருலதாவும், தாமசும் அந்த நாட்டின் முறைப்படி பதிவு திருமணம் செய்து கொண்டனர்.
இருப்பினும் தாமஸ், இந்து மத முறைப்படி திருமணம் செய்ய விரும்பினார். அதன்படி இருவரும் இந்தியாவுக்கு வந்தனர். அவர்களுடன் அந்த நாட்டை சேர்ந்த தாமசின் நண்பர் ஒருவரும், சாருலதாவின் தோழி ஒருவரும் வந்திருந்தனர்.
இதையடுத்து தமிழக பாரம்பரிய இந்து மத முறைப்படி திருமணம் செய்து வைக்க சாருலதாவின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் முடிவு செய்தனர். அதன்படி இவர்களது திருமணத்தை விருத்தாசலம் மணவாளநல்லூரில் உள்ள கொளஞ்சியப்பர் கோவிலில் நடத்த திட்டமிடப்பட்டது. இதற்காக திருமண அழைப்பிதழ் அச்சடிக்கப்பட்டு உறவினர்களுக்கு வழங்கப்பட்டது.
அதன்படி நேற்று காலை 11 மணிக்கு கொளஞ்சியப்பர் கோவிலுக்கு சாருலதாவின் உறவினர்கள் புடைசூழ வந்தனர். சாருலதா பட்டு சேலையும், தாமஸ் பட்டு வேட்டியும் அணிந்து, மணமேடையில் வந்து அமர்ந்தனர். பின்னர் சிவாச்சாரியார்கள் மந்திரங்கள் ஓத, மணமக்கள் திருமண சடங்குகளை செய்தனர். இதைத்தொடர்ந்து தாமஸ், சாருலதாவிற்கு தாலி கட்டினார். அப்போது அங்கு கூடியிருந்த அவரது உறவினர்கள் அட்சதை தூவி மணமக்களை வாழ்த்தினார்கள். வெளிநாட்டு மாப்பிள்ளைக்கும், கடலூர் பெண்ணுக்கும் திருமணம் நடப்பதை அறிந்ததும் கோவிலுக்கு வந்திருந்த பக்தர்கள் அங்கு குவிந்து, அந்த திருமணத்தை ஆச்சரியத்துடன் பார்த்தனர்.
இதுகுறித்து சாருலதா கூறுகையில், என் குடும்பத்தாருக்கு தாமசை பிடித்திருந்தது. இருவருக்கும் மனம் ஒத்துப்போனதால் திருமணம் செய்து கொண்டோம். முதலில் எங்கள் வீட்டில் எனது காதலை கூறியதும் ஏற்றுக்கொள்ளவில்லை. பிறகு தாமஸ், இந்தியா வந்ததும் அவருடன் பழகிய எனது பெற்றோருக்கு அவரை பிடித்து விட்டது. பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டோம் என்றார்.
Related Tags :
Next Story