பழவேற்காடு கடலில் சுருக்குவலையில் மீன்பிடித்ததால் 2 மாவட்ட மீனவர்களிடையே மோதல்


பழவேற்காடு கடலில் சுருக்குவலையில் மீன்பிடித்ததால் 2 மாவட்ட மீனவர்களிடையே மோதல்
x
தினத்தந்தி 3 Aug 2018 3:33 AM IST (Updated: 3 Aug 2018 3:33 AM IST)
t-max-icont-min-icon

பழவேற்காடு கடலில் சுருக்குவலையில் மீன்பிடித்ததால் 2 மாவட்ட மீனவர்களிடையே மோதல் ஏற்பட்டது.

பொன்னேரி,

திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காடு கடலில் ஏராளமான மீனவர்கள் சிறு மீன்கள் முதல் பெரிய மீன்கள் வரை பிடித்து வெளி மாநிலங்களுக்கு ஏற்றுமதி செய்து வருகின்றனர். இந்த நிலையில் ஒரு சிலர் அரசால் தடை செய்யப்பட்டுள்ள சுருக்கு வலைகளை பயன்படுத்தி மீன்பிடித்து வருகின்றனர்.

இதனால் மீன்வளம் குன்றி போதிய மீன் கிடைக்காமல் மீனவர்கள் ஏமாற்றத்துடன் கரைக்கு திரும்புகின்றனர். இதனால் பழவேற்காடு பகுதியில் மீன் விலை அதிகரித்துள்ளது. இந்த நிலையில் கடந்த 15 நாட்களாக பழவேற்காடு கடலில் 2 கிலோ முதல் 10 கிலோ வரையுள்ள மீன்கள் மீனவர்களின் வலையில் சிக்கியது.

நேற்று முன்தினம் பழவேற்காடு கடலில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட சுருக்கு வலையை பயன்படுத்தி விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தை சேர்ந்த மீனவர்கள் 8 பெரிய படகுகளில் மீன்பிடித்து கொண்டிருந்தனர்.

மோதல்

இதனை பார்த்த பழவேற்காடு மீனவர்கள் அங்கு சென்று அவர்களிடம் கேட்ட போது தகராறு ஏற்பட்டு மோதலாக மாறியது. இதையடுத்து 7 படகுகளில் மரக்காணம் மீனவர்கள் அங்கிருந்து தப்பிச்சென்று விட்டனர். ஒரு படகில் இருந்த மீன்களை பழவேற்காடு மீனவர்கள் கைப்பற்றி படகுடன் கரைக்கு கொண்டு வந்தனர்.

விழுப்புரம் மாவட்ட மீனவர்கள் பழவேற்காடு கடலில் சுருக்கு வலைகளை பயன்படுத்தி மீன் பிடிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து பழவேற்காடு மினவர்கள் நேற்று வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். பழவேற்காடு பகுதியில் உள்ள 20 மீனவ கிராமங்களில் ஆலோசனை கூட்டங்கள் நடந்து வருகிறது.

Next Story