மாணவர்களிடம் சாதி பாகுபாடு பார்த்ததாக புகார்: பள்ளி தலைமை ஆசிரியை பணியிடை நீக்கம்
மாணவர்களிடம் சாதி பாகுபாடு பார்த்ததாக எழுந்த புகாரின் பேரில் எழுத்தூர் பள்ளி தலைமை ஆசிரியையை பணியிடை நீக்கம் செய்து விருத்தாசலம் கல்வி மாவட்ட அலுவலர் நடவடிக்கை எடுத்துள்ளார்.
கடலூர்,
திட்டக்குடி அருகே உள்ள எழுத்தூர் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. இந்த பள்ளி தலைமை ஆசிரியையாக திட்டக்குடியை சேர்ந்த அனுசுயா என்பவர் பணியாற்றி வந்தார். இந்நிலையில் அவர் சாதி பாகுபாடு பார்த்து ஒரு பிரிவு மாணவ-மாணவிகளை மட்டும் வகுப்பறையில் தனியாகவும், மற்ற பிரிவை சேர்ந்த மாணவ-மாணவிகளை தனியாகவும் அமர வைத்ததாக புகார் எழுந்தது. இது பற்றி அறிந்த மாணவர்களின் பெற்றோர் பள்ளிக்கூடத்துக்கு திரண்டு வந்தனர். பின்னர் அவர்கள், ஒரு பிரிவு மாணவர்களை மட்டும் ஏன் தனியாக அமர வைத்தீர்கள்? என்று தலைமை ஆசிரியையிடம் கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதில் ஆத்திரமடைந்த தலைமை ஆசிரியை அனுசுயா, தன்னுடன் வாக்குவாதம் செய்த ஒரு பெண் ணின் தலை முடியை பிடித்து இழுத்து தாக்கினார். பதிலுக்கு மற்ற பெண்களும் அவரை தாக்கினர். அப்போது ஒரு பெண் அனுசுயாவை செருப்பால் தாக்கினார். பதிலுக்கு அவரும் தன்னுடைய செருப்பால் அவர்களை தாக்கினார். இவை அனைத்தையும் ஒரு பெண் தன்னுடைய செல்போனில் படம் பிடித்தார். இந்த வீடியோ காட்சி வாட்ஸ்-அப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவியது.
இந்த சம்பவம் தொடர்பாக விருத்தாசலம் கல்வி மாவட்ட அலுவலர் செல்வராசு, தாசில்தார் சத் தியன், விருத்தாசலம் கோட்டாட்சியர் சந்தோஷினி சந்திரா ஆகியோர் தனித்தனியாக விசாரணை நடத் தினர். இந்த விசாரணையின் அறிக்கையை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பழனிசாமி, சென்னை பள்ளி கல்வி இயக்குனர் அலுவலகத்துக்கு அனுப்பி வைத்தார்.
இது பற்றி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பழனிசாமியிடம் கேட்ட போது, மாணவர்களிடம் சாதி பாகுபாடு பார்த்த சம்பவம் தொடர்பாக எழுத்தூர் பள்ளி தலைமை ஆசிரியை அனுசுயாவை பணியிடை நீக்கம் செய்ய விருத்தாசலம் கல்வி மாவட்ட அலுவலருக்கு பரிந்துரை செய்துள்ளேன். அதன்பேரில் விருத்தாசலம் கல்வி மாவட்ட அலுவலர் செல்வராசு, பள்ளி தலைமை ஆசிரியை அனுசுயாவை பணியிடை நீக்கம் செய்துள்ளார். இதற்கான உத்தரவு நகல் அவரிடம் நாளை (அதாவது இன்று) வழங்கப்படும் என்றார்.
Related Tags :
Next Story