மராத்தா இடஒதுக்கீடு விவகாரம் 9-ந் தேதி முதல் மீண்டும் தீவிர போராட்டம் நடத்த முடிவு மராட்டியத்துக்கு மத்திய படை வருகிறது
இடஒதுக்கீடு கேட்டு மராத்தா சமுதாயத்தினர் மீண்டும் 9-ந் தேதி முதல் போராட்டத்தை தீவிரப்படுத்த உள்ளனர். இதை யடுத்து மத்திய படையை அனுப்பி வைக்குமாறு மாநில போலீசார் கோரி உள்ளனர்.
மும்பை,
இடஒதுக்கீடு கேட்டு மராத்தா சமுதாயத்தினர் மீண்டும் 9-ந் தேதி முதல் போராட்டத்தை தீவிரப்படுத்த உள்ளனர். இதை யடுத்து மத்திய படையை அனுப்பி வைக்குமாறு மாநில போலீசார் கோரி உள்ளனர். போராட்டத்தின் போது வன்முறையை கைவிடுமாறு மராத்தா தலைவர்களுக்கு முதல்-மந்திரி பட்னாவிஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மராட்டியத்தின் மக்கள் தொகை சுமார் 12 கோடி. இதில் 30 சதவீதம் பேர் மராத்தா சமுதாயத்தை சேர்ந்தவர்கள்.
கலவரம்
இவர்கள் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் தங்களுக்கு 16 சதவீதம் இட ஒதுக்கீடு கேட்டு போராடி வருகின்றனர்.
கடந்த 25-ந்தேதி இடஒதுக்கீடு கோரி மும்பை, தாேன, பால்கர், ராய்காட் மாவட்டங்களில் முழு அடைப்பு போராட்டம் நடத்தினர். முழு அடைப்பு நடந்த மாவட்டங்கள் மட்டும் இன்றி மாநிலம் முழுவதும் கலவரம் வெடித்தது. ஏராளமான வாகனங்கள் தீ வைத்து கொளுத்தப்பட்டன. பஸ்களின் கண்ணாடிகள் அடித்து நொறுக்கப்பட்டன.
குறிப்பாக நவிமும்பையில் நடந்த வன்முறைக்கு வாலிபர் ஒருவர் பலியானார். மேலும் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி 6 பேர் தற்கொலை செய்துகொண்டனர்.
சாக்கனில் வன்முறை
கடந்த 30-ந்தேதி புனே அருகே சாக்கனிலும் பயங்கர வன்முறை ஏற்பட்டது. இதில் 25 வாகனங்கள் தீ வைத்து கொளுத்தப்பட்டன. மொத்தம் 80 வாகனங்கள் சேதம் அடைந்தன.
இதேபோல அவ்வப்போது வன்முறை போராட்டம் நடந்து வருகிறது. ஒரே சமயத்தில் பல்வேறு இடங்களில் வன்முறை நடப்பதால் மராட்டிய போலீசார் கலவரத்தை கட்டுப்படுத்த முடியாமல் திணறி வருகிறார்கள்.
கடந்த சில நாட்களுக்கு முன் முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் மராத்தா சமுதாய தலைவர்களை நேரில் சந்தித்து பேசினார். அப்போது சிறப்பு சட்டசபை கூட்டி நடவடிக்கை எடுக்கப்படும் என அவர்களிடம் உறுதி அளித்தார். இதனால் கலவரம் சற்று ஓய்ந்தது.
மீண்டும் போராட்ட அறிவிப்பு
இந்தநிலையில் வரும் 9-ந்தேதி மீண்டும் தீவிர போராட்டத்தில் ஈடுபட போவதாக மராத்தா சமுதாயத்தினர் அறிவித்து உள்ளனர். இது மாநிலத்தில் மீண்டும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.
இதையடுத்து பாதுகாப்பிற்காக மத்திய பாதுகாப்பு படையை அனுப்பவேண்டும் என்று மாநில அரசு கோரிக்கை வைத்துள்ளது.
இதுகுறித்து மாநில உள்துறை உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில், “எங்களிடம் மாநில ரிசர்வ் போலீசார் உள்ளனர். இருப்பினும் பல்வேறு பகுதிகளில் போராட்டம் நடக்கும்போது அதை கட்டுப்படுத்துவது கடினமான காரியமாகும். எனவே அசாதாரண சூழல் ஏற்பட்டால் சூழ்நிலையை எதிர்கொள்ள மத்திய அரசிடம் கூடுதல் படையை கோரியுள்ளோம்” என்றார்.
இதையடுத்து மத்திய பாதுகாப்பு படையினர் விரைவில் மராட்டியம் வருவார்கள் என்று தெரிகிறது.
வன்முறையை கைவிடவேண்டும்
இதற்கிடையே மராத்தா சமுதாயத்தை சேர்ந்த 22 முக்கிய தலைவர்களை முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் நேற்று சந்தித்து பேசினார். சுமார் 3 மணி நேரம் இந்த சந்திப்பு நீடித்தது.
பின்னர் முதல்-மந்திரி அளித்த பேட்டியில் கூறியதாவது:-
மராத்தா சமுதாயத்தினருக்கு நிவாரணம் வழங்க பல்வேறு குறுகியகால மற்றும் நீண்டகால திட்டங்கள் குறித்து கலந்துரையாடினோம்.
அனைவரும் நல்ல ஆலோசனைகளை வழங்கினர். எனவே அரசு அடுத்தக்கட்ட நடவடிக்கையை மேற்கொள்ள உள்ளது.
இடஒதுக்கீடு நடவடிக்கை எடுப்பதற்கு முன்பு அதற்கான சட்ட ரீதியான நடவடிக்கைகள் எடுக்கவேண்டியுள்ளது. எனவே மராத்தா மக்கள் தங்களது போராட்டத்தில் வன்முறையை கைவிட்டு அமைதி காக்கவேண்டும்.
இவ்வாறு முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் கூறினார்.
எம்.எல்.ஏ.க்கள் கூட்டம்
இந்த நிலையில் மராத்தா இடஒதுக்கீடு தொடர்பாக பா.ஜனதா எம்.எல்.ஏ.க்களின் கருத்தை கேட்க முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் முடிவு செய்தார். அதற்காக நேற்று தேவேந்திர பட்னாவிஸ் தலைமையில் மும்பையில் உள்ள கட்சி அலுவலகத்தில் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடந்தது.
Related Tags :
Next Story