ஓடும் மின்சார ரெயிலில் பாம்பு; பதறிய பயணிகள் அசம்பாவிதத்தை ஏற்படுத்த சதியா?


ஓடும் மின்சார ரெயிலில் பாம்பு; பதறிய பயணிகள் அசம்பாவிதத்தை ஏற்படுத்த சதியா?
x
தினத்தந்தி 3 Aug 2018 5:00 AM IST (Updated: 3 Aug 2018 4:00 AM IST)
t-max-icont-min-icon

மும்பை சி.எஸ்.எம்.டி. நோக்கி வந்த மின்சார ரெயிலின் முதல் வகுப்பு பெட்டியில் பாம்பு இருந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

மும்பை, 

மும்பை சி.எஸ்.எம்.டி. நோக்கி வந்த மின்சார ரெயிலின் முதல் வகுப்பு பெட்டியில் பாம்பு இருந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. அசம்பாவிதத்தை ஏற்படுத்த நடந்த சதியா? என்பது குறித்து ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

ரெயிலில் பாம்பு

மத்திய ரெயில்வே வழித்தடத்தில் டிட்வாலா ரெயில் நிலையத்தில் இருந்து நேற்று காலை 8.40 மணிக்கு மும்ைப சி.எஸ்.எம்.டி. நோக்கி மின்சார ரெயில் ஒன்று வந்து கொண்டிருந்தது.

காலை நேரம் என்பதால் அந்த ரெயிலின் முதல் வகுப்பு பெட்டியிலும் பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்தது. பயணிகள் பலர் நின்று கொண்டு பயணம் செய்தனர்.

அந்த பெட்டியில் இருந்த பயணிகளுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. காலை 9.30 மணியவில் ரெயில் தானேயை நெருங்கி கொண்டிருந்த போது, அந்த பெட்டியில் உள்ள மின்விசிறியில் 3 அடி நீள பச்சை பாம்பு ஒன்று நெளிந்து கொண்டிருந்தது.

பதறிய பயணிகள்

இதைப்பார்த்த சில பயணிகள் பாம்பு... பாம்பு... என்று பதறினார்கள். உடனே மற்ற பயணிகளும் அலறினர். இதனால் முதல் வகுப்பு பெட்டியில் பரபரப்பு உண்டானது. பாம்பை கண்டால் படையே நடுங்கும் என்பார்கள். ஓடும் ரெயிலில் பாம்பு இருந்தால்... அதை நினைத்து பார்க்கவே தைரியம் வேண்டும்.

இருப்பினும் தைரியமான பயணிகள் சிலர் அந்த பாம்பை லாவகமாக பிடித்து தானே ரெயில் நிலையம் வந்ததும் வெளியில் விட்டனர். இதையடுத்து, பயணிகள் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.

நல்லவேளையாக அந்த பாம்பு மின்விசிறியில் இருந்தது. ஒரு வேளை இருக்கைக்கு கீழே இருந்து வெளியே தலையை காட்டியிருந்தால், பயத்தில் ஓடும் ரெயிலில் இருந்து கூட கீழே குதித்து இருப்போம் என பயணி ஒருவர் பீதியுடன் கூறினார்.

சந்தேகம்

இதற்கிடையே ரெயிலில் அசம்பாவிதத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் பயணிகள் யாரேனும் வேண்டும் என்றே பாம்பை விட்டு இருக்கலாம் என்று மத்திய ரெயில்வே அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர். ஏனெனில் பாம்பு இருந்த மின்சார ரெயில் ஏற்கனவே 2 முறை டிட்வாலா ரெயில் நிலையத்தில் இருந்து சி.எஸ்.எம்.டி. வந்து சென்று உள்ளது. அப்போது பாம்பு யார் கண்ணிலும் தென்படவில்லை.

இதனால் ரெயில் நிலையத்தில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ள காட்சிகளை ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார் ஆய்வு செய்து வருகிறார்கள்.

ஓடும் ரெயிலில் மின்விசிறியில் பாம்பு இருந்ததை சிலர் படம் பிடித்து சமூக வலைதளங்களில் வெளியிட்டனர். அது வைரலாகி வருகிறது.

Next Story