அழகர்மலை பகுதியில் சில்வண்டுகள் இரைச்சல் மழைக்கான அறிகுறி என விவசாயிகள் நம்பிக்கை
அழகர்மலை பகுதியில் சில்வண்டுகளின் இரைச்சல் கேட்க தொடங்கி உள்ளதால், மழை பெய்வதற்கான அறிகுறி என்று விவசாயிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
அழகர்கோவில்,
மழைபெய்வதை முன்கூட்டியே வானிலை ஆய்வு மையம் மூலமாக காலம் காலமாக அறிந்து வருகிறோம். தற்போதைய காலகட்டங்களில் கிராமப்புற மக்கள் மழை வருவதை முன்கூட்டியே தெரிந்து கொள்வதில் பல வழிகளில் பாரம்பரிய வழக்கத்தையே கடைபிடித்து வருகின்றனர்.
இதில் தட்டான்கள் எனப்படும் தும்பிகள் கூட்டமாக சுற்றுவதும், வண்ணத்துப்பூச்சிகள் வட்டமிட்டு பறப்பதும், வானத்தில் நிலா வட்டமிட்டு காட்டுவதையும், வறண்டு போன நிலங்களில் தவளைகள் கத்துவதும், வண்ண மயில்கள் தோகை விரித்து ஆடுவதும், மழையின் வரவை தெரிவிக்கும் அறிகுறிகளாக இன்றளவிலும் விவசாயிகள் நம்பிக்கையுடன் உள்ளனர்.
இதற்கெல்லாம் மேலாக பல நூறு ஆண்டுகளாக வழக்கத்தில் இருந்து வரும் மலைகுருவி என்னும் சில்வண்டுகள் இரைந்தாலே மழைவரும் என்ற நம்பிக்கை விவசாயிகளிடையே இருந்து வருகிறது. தென்மேற்கு பருவமழை காலம் தொடங்கி இருந்தாலும் இந்த வண்டுகளின் இரைச்சல் வந்தால் தான் மழைகாலம் தொடங்கிவிட்டது என்று விவசாயிகள் உணருகின்றனர். இந்த வண்டுகள் பருவமழை காலங்களில் மட்டுமே ஓசையிடும்.
அதன் இரைச்சலை நெருங்கி சென்று கேட்கவும், வண்டுகளை பார்க்கவும் ஆசைப்பட்டு அருகில் சென்றால், சத்தத்தை உடனே நிறுத்திவிட்டு அந்த இடத்தை விட்டு அகன்றுவிடும். அழகர்கோவில் பகுதிகளில் உள்ள அடர்ந்த தோப்புகளிலும், சாலையோரங்களில் உள்ள மரங்களிலும் இந்த வண்டுகளின் இரைச்சல்களை தற்போது கேட்கலாம்.
ஒருவித பழுப்பு நிறத்தில் ராட்சத ‘ஈ‘ வடிவத்தில், மரங்களின் இடுக்குகளில் இந்த வண்டுகள் அட்டை போல் ஒட்டிக்கொண்டிருக்கும். இரவில் கேட்க அச்சப்படும் விதத்தில் அதிபயங்கரமான இரைச்சலை இந்த வண்டுகள் வெளிப்படுத்தும். மழைகாலங்களில் மட்டும் இது இரையும் மற்ற மாதங்களில் இந்த வண்டுகளை பார்க்கவோ, இரைச்சலை கேட்கவோ முடியாது. இந்த வண்டுகளுக்கு நமது முன்னோர்கள் வைத்த பெயர் மலைகுருவி. தற்போது இந்த வண்டுகளின் இரைச்சலை அழகர்மலை, பாலமேடு, மஞ்சமலை உள்ளிட்ட மலைபிரதேசங்களில் கேட்கலாம். இந்த வண்டுகளின் இரைச்சல் கன மழைபெய்தால் மட்டுமே நிற்கும் என்றும் கூறப்படுகிறது.
Related Tags :
Next Story