குழந்தைகளுக்கு தாயத்து கட்ட வந்த ஜோதிடர் விபத்தில் பலி


குழந்தைகளுக்கு தாயத்து கட்ட வந்த ஜோதிடர் விபத்தில் பலி
x
தினத்தந்தி 3 Aug 2018 5:01 AM IST (Updated: 3 Aug 2018 5:01 AM IST)
t-max-icont-min-icon

குழந்தைகளுக்கு தாயத்து கட்ட வந்த ஜோதிடர் ஊருக்கு திரும்பி செல்லும் வழியில் மோட்டார் சைக்கிள் குழியில் பாய்ந்ததில் சம்பவ இடத்திலேயே பலியானார்.

பெத்தநாயக்கன்பாளையம், 

திருப்பூர் மாவட்டம், உடுமலைபேட்டை தென்குளம் பகுதியை சேர்ந்தவர் சக்திவேல்(வயது 45), ஜோதிடர். இவர் ஊர், ஊராக சென்று ஜோதிடம் பார்ப்பது, எந்திரம் கட்டுவது, குழந்தைகளுக்கு தாயத்து கட்டுவது போன்றவற்றை செய்து வந்தார்.

நேற்று முன்தினம் இவர் சேலம் மாவட்டம், கருமந்துறைக்கு ஜோதிடம் பார்க்கவும், குழந்தைகளுக்கு தாயத்து கட்டவும் வந்தார். அங்கு நள்ளிரவு வரை வீடுகளுக்கு சென்று ஜோதிடம் பார்த்த அவர் குழந்தைகளுக்கு தாயத்து கட்டி உள்ளார். பின்னர் இரவில் பஸ் வசதி இல்லாததால் அதே ஊரை சேர்ந்த அய்யப்பன் என்பவர் ஜோதிடர் சக்திவேலை தனது மோட்டார் சைக்கிளில் வாழப்பாடிக்கு கொண்டு வந்து விட முடிவு செய்தார்.

இதையடுத்து அய்யப்பனின் மோட்டார் சைக்கிளில், அதே ஊரை சேர்ந்த துரைசாமியுடன் சக்திவேலை வாழப்பாடிக்கு கொண்டு விட புறப்பட்டனர். நள்ளிரவு 12 மணியளவில் ஜோதிடர் சக்திவேல் அந்த மோட்டார் சைக்கிளை ஓட்டிச்செல்ல, மற்ற 2 பேரும் பின்னால் அமர்ந்திருந்தனர்.

பலி

கருமந்துறை மலைப்பாதையில் இருந்து இறங்கி வந்த போது, கொடைபிள்ளையார் கோவில் அருகே உள்ள வளைவில் மோட்டார் சைக்கிள் திரும்பியது. அப்போது மோட்டார் சைக்கிள் சக்திவேலின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த 10 அடி ஆழ குழியில் பாய்ந்தது. இதில் தலையில் பலத்த காயம் அடைந்து ஜோதிடர் சக்திவேல் சம்பவ இடத்திலேயே பலியானார். அய்யப்பனும், துரைசாமியும் காயம் அடைந்தனர்.

இந்த விபத்து குறித்து தகவல் கிடைத்ததும், அங்கு விரைந்து வந்த கருமந்துறை போலீஸ் இன்ஸ்பெக்டர் பாஸ்கரபாபு தலைமையிலான போலீசார், விபத்தில் பலியானவரின் உடலை கைப்பற்றி சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் காயம் அடைந்த அய்யப்பன், துரைசாமி ஆகியோர் ஆத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றனர்.

இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

Next Story