சேலம் கிழக்கு வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை கணக்கில் வராத ரூ.2 லட்சம் சிக்கியது
சேலம் கிழக்கு வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். இதில் கணக்கில் வராத ரூ.2 லட்சம் சிக்கியது.
சேலம்,
சேலம் கிழக்கு வட்டார போக்குவரத்து அலுவலகம் உடையாப்பட்டியில் உள்ளது. இங்கு ஓட்டுனர் உரிமம், புதுப்பித்தல், வாகனங்களுக்கு தகுதிச்சான்று பெறுதல் உள்ளிட்ட பல்வேறு தேவைகளுக்காக தினமும் ஏராளமானோர் வந்து செல்கிறார்கள். இதனால் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் காலை முதல் மாலை வரையிலும் கூட்டம் அதிகமாக காணப்படும்.
இந்தநிலையில், சேலம் கிழக்கு வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் ஓட்டுனர் உரிமம் பெறுதல், தகுதிச்சான்று, பெர்மிட் உள்ளிட்டவைகளுக்கு அரசு நிர்ணயம் செய்த கட்டணத்தை விட புரோக்கர்கள் மூலம் கூடுதல் பணம் பெறப்படுவதாக சேலம் லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீசாருக்கு புகார்கள் சென்றன.
லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை
அதன்பேரில் துணை போலீஸ் சூப்பிரண்டு சந்திரமவுலி தலைமையில் 13-க்கும் மேற்பட்ட லஞ்ச ஒழிப்பு போலீசார் நேற்று மாலை 5 மணியளவில் கிழக்கு வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் அதிரடி சோதனை மேற்கொண்டனர். அப்போது, போலீசார் வருவதை அறிந்தவுடன், அங்கு நின்று கொண்டிருந்த புரோக்கர்கள் சிலர் திடீரென அலுவலகத்தின் பின்பக்க வழியாக ஓட்டம் பிடித்தனர். இதை பார்த்த லஞ்ச ஒழிப்பு போலீசார் அவர்களை துரத்தி பிடித்தனர்.
பின்னர், அலுவலகத்தில் இருந்த 25-க்கும் மேற்பட்ட புரோக்கர்கள், ஓட்டுனர் பயிற்சி பள்ளி ஊழியர்கள் ஆகியோரை லஞ்ச ஒழிப்பு போலீசார் சுற்றிவளைத்து பிடித்து யாரும் வெளியே செல்லக்கூடாது என்றும், அனைவரும் அலுவலகத்திலேயே ஆங்காங்கே அமருமாறும் அறிவுறுத்தினர். மேலும், அலுவலகத்தில் இருந்த வட்டார போக்குவரத்து அலுவலர் கதிரவன், மோட்டார் வாகன ஆய்வாளர்கள் பதுமைநாதன், லோகநாதன் மற்றும் 10-க்கும் மேற்பட்ட ஊழியர்களும் வெளியே செல்லக்கூடாது என்றும், அவரவர் இருக்கையில் அமருமாறும் உத்தரவிடப்பட்டது. அதேசமயம், வெளியில் இருந்து யாரும் அலுவலகத்திற்குள் வர அனுமதிக்கப்படவில்லை.
ரூ.2 லட்சம் சிக்கியது
இதைத்தொடர்ந்து அலுவலகத்தில் இருந்த புரோக்கர்களிடம் என்ன காரணத்திற்காக வந்தீர்கள்? என்று தனித்தனியாக லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை நடத்தினர். மேலும், அலுவலகத்தில் இருந்த அதிகாரிகளிடமும் விசாரணை நடத்தப்பட்டது. இந்த சோதனையின் முடிவில், கணக்கில் வராத ரூ.2 லட்சம் சிக்கியது.
மேலும், புரோக்கர்களிடம் இருந்து சில ஆவணங்களையும் போலீசார் பறிமுதல் செய்ததாக கூறப்படுகிறது. இதுதவிர, வட்டார போக்குவரத்து அலுவலர், மோட்டார் வாகன ஆய்வாளர்கள் ஆகியோரின் அறைகள் உள்பட அலுவலகத்தில் உள்ள அனைத்து அறைகளிலும் பணம் ஏதும் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதா? என்று லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர். இந்த சோதனை நள்ளிரவு வரையிலும் நீடித்தது.
இதுகுறித்து சேலம் லஞ்ச ஒழிப்பு போலீசார் கூறுகையில், தனிப்பட்ட நபரின் புகார் ஏதும் இல்லை. பொதுவாக புகார் வந்ததால் அதன்அடிப்படையில் சோதனை நடத்துகிறோம். புரோக்கர்களிடம் இருந்து கணக்கில் வராத ரூ.2 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அதிகாரிகள் யார் மீதும் வழக்குப்பதிவு செய்யப்படவில்லை. அவர்களை கைது செய்யவில்லை. இதுதொடர்பாக அதிகாரிகளிடம் விசாரணை நடத்தி வருகிறோம், என்றனர். சேலம் கிழக்கு வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசாரின் அதிரடி சோதனையால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story