போலியாக மகளிர் சங்கத்தை தொடங்கி ரூ.50 லட்சம் மோசடி
வாலாஜாவில் போலியாக மகளிர் சங்கத்தை தொடங்கி கடன் வழங்குவதாக கூறி ரூ.50 லட்சத்தை மோசடி செய்து விட்டு தப்பியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி போலீஸ் நிலையத்தை பெண்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
வாலாஜா,
வேலூர் மாவட்டம் வாலாஜாவில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு புதிதாக ‘செவன்த் ஸ்டார்’ மகளிர் சங்கம் தொடங்கப்பட்டுள்ளதாகவும் அந்த சங்கம் மூலம் பெண்களுக்கு கடன் வழங்கப்படும் எனவும் கூறி சிலர் வீடு வீடாக சென்று நோட்டீஸ் வினியோகித்துள்ளனர். அருகில் உள்ள கிராமங்களிலும் இந்த நோட்டீஸ் வினியோகிக்கப்பட்டது. அந்த நோட்டீசில் விதிமுறைகள் மற்றும் கடன் பற்றிய விவரங்கள் தெரிவிக்கப்பட்டிருந்ததோடு கடன் பெற விரும்பும் பெண்கள் சங்க அலுவலகத்தில் ரூ.301-ஐ கட்டணமாக செலுத்தி உறுப்பினராக இணையலாம் என கூறப்பட்டிருந்தது.
இதனை உண்மை என நம்பி ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்கள் ரூ.301 நுழைவுக்கட்டணம் செலுத்தி உறுப்பினர்களாக இணைந்தனர். அவர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டது. அப்போது ஒரு குழுவுக்கு 7 பேர் இருந்தால் போதும் என்றும் அதில் ஒருவர் தலைவி என நியமனம் செய்து குழு உருவாக்கி அதில் யாருக்கு கடன் வேண்டுமோ அவர்கள் உறுப்பினர் அட்டைகளை காண்பித்து ரூ.10 ஆயிரம், ரூ.20 ஆயிரம் பெறலாம் என அந்த நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
இதன்படி பலர் கடன் கேட்டுள்ளனர். அப்போது முதல் தவணை தொகை செலுத்தினால் கடன் வழங்கப்படும் எனவும், ரூ.10ஆயிரம், ரூ.20ஆயிரம் கடன் வேண்டுவோருக்கு உறுப்பினர் அட்டையே போதுமானது என்றும், ரூ.30 ஆயிரம் வாங்க விரும்புவோர் ரூ.1,750-ம், ரூ.40 ஆயிரம் வாங்குவோர் ரூ.2 ஆயிரத்து 150-ம், ரூ 50 ஆயிரம் வாங்குவோர் ரூ.3ஆயிரமும் முன்பணமாக செலுத்த வேண்டும் என கூறப்பட்டது. அதன்படி கடன் கிடைக்கும் என நம்பி பலர் முன்பணம் செலுத்தியுள்ளனர்.
இந்த நிலையில் முன் பணம் கட்டியவர்களுக்கு போன் அழைப்பு வந்துள்ளது. அதில் பேசியவர்கள் ‘செவன்த்ஸ்டார்’ மகளிர் சங்கத்திலிருந்து பேசுவதாகவும், கடன் தொகையை பெற்றுக்கொள்ளலாம் எனவும் தகவல் கூறப்பட்டது. அதன்படி கடன் வாங்குவதற்காக வாலாஜா புஜனராவ் தெரு பி.எஸ்.என்.அலுவலகம் அருகே உள்ள ‘செவன்த்ஸ்டார்’ மகளிர் சங்க அலுவலகத்துக்கு சென்றபோது அந்த அலுவலகம் பூட்டப்பட்டிருந்ததை கண்டு பணம் கட்டிய பெண்கள் அதிர்ச்சியடைந்தனர். பின்னர் அலுவலகத்தில் பணிபுரியும் நபர்களுக்கு செல்போன் மூலம் தொடர்பு கொண்டபோது ‘சுவிட்ச் ஆப்’ செய்யப்பட்டிருந்தது. இதனால் அந்த மகளிர் சங்க அலுவலகம் போலியானது என்பதும், தங்களிடம் ரூ.50 லட்சம் வரை வசூலித்துவிட்டு அவர்கள் மோசடி செய்து தப்பித்ததும் தெரியவந்தது.
இதையடுத்து அங்கு வேலை பார்த்த 2 நபர்களை பிடித்த பெண்கள் அவர்களை வாலாஜா போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். பின்னர் தாங்கள் செலுத்திய பணத்தை திரும்ப பெற்றுத்தர வேண்டும் என்றும் ஏமாற்றிய ‘செவன்த் ஸ்டார்’ சங்கத்தினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கூறி அவர்கள் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டனர். இதனால் போலீஸ் நிலைய வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. போலீசார் அது குறித்து நடவடிக்கை எடுப்பதாக கூறியதையடுத்து சம்பந்தப்பட்டவர்கள் மீது புகார் அளிக்கப்பட்டது. அதனையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.
இந்த நிலையில் வாலாஜா, ராணிப்பேட்டை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளை சேர்ந்த 25-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வேலூர் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் மனு கொடுத்தனர். அந்த மனுவில் கடன் கொடுப்பதாக கூறி, எங்களை ஏமாற்றி பல லட்சம் ரூபாய் மோசடி செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். எங்களின் பணத்தைத் திரும்ப பெற்றுத்தர வேண்டும் என்று மனுவில் கூறியிருந்தனர்.
மனுவை பெற்றுக்கொண்ட போலீசார் உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறினர்.
Related Tags :
Next Story