கோத்தகிரி காந்தி மைதானம் சர்வதேச தரத்திற்கு மேம்படுத்தப்படும், சாந்தி ராமு எம்.எல்.ஏ. உறுதி


கோத்தகிரி காந்தி மைதானம் சர்வதேச தரத்திற்கு மேம்படுத்தப்படும், சாந்தி ராமு எம்.எல்.ஏ. உறுதி
x
தினத்தந்தி 4 Aug 2018 3:45 AM IST (Updated: 4 Aug 2018 12:12 AM IST)
t-max-icont-min-icon

கோத்தகிரியில் உள்ள காந்தி மைதானம் சர்வதேச தரத்திற்கு மேம்படுத்தப்படும் என்று சாந்தி ராமு எம்.எல்.ஏ. உறுதி அளித்தார்.

கோத்தகிரி,

கோத்தகிரி நகரின் மத்தியில் காந்தி மைதானம் அமைந்து உள்ளது. இந்த மைதானத்தில் கால்பந்து, கூடைப்பந்து, கைப்பந்து மைதானங்களும், இங்குள்ள புயல் நிவாரண கூடத்தில் இறகுப்பந்து உள்விளையாட்டு அரங்கமும் அமைந்து உள்ளது. இங்கு கோத்தகிரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த விளையாட்டு வீரர்களும், பள்ளி மாணவ–மாணவிகளும் தினந்தோறும் பயிற்சி பெற்று வருகின்றனர்.

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் மூலம் இந்த மைதானம் பராமரிக்கப்பட்டு வருகிறது. இங்கு பயிற்சி பெற்ற விளையாட்டு வீரர்கள் தேசிய, மாநில மற்றும் மாவட்ட அளவிலான போட்டிகளுக்கு தேர்வு செய்யப்பட்டு விளையாடி வருகின்றனர். மேலும் பலர் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணிபுரிந்து வருகின்றனர்.

புகழ் பெற்ற காந்தி மைதானத்தை சர்வதேச தரத்திற்கு மேம்படுத்த வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்த நிலையில் குன்னூர் எம்.எல்.ஏ. சாந்தி ராமு கோத்தகிரி காந்தி மைதானத்தை நேற்று மதியம் ஆய்வு மேற்கொண்டார். மாவட்ட விளையாட்டு அலுவலர் பியூலா ஜேன் சுசீலா மற்றும் விளையாட்டு பயிற்றுனர் மோகன் ஆகியோரிடம் காந்தி மைதானத்தை மேம்படுத்துவது குறித்து விளக்கமாக கேட்டறிந்தார். ஆய்வுக்கு பிறகு சாந்தி ராமு எம்.எல்.ஏ. நிருபர்களிடம் கூறியதாவது:–

கோத்தகிரி நேரு பூங்கா வளாகத்தை ஒட்டி காமராஜர் சதுக்கத்தில் இருந்து மார்க்கெட் திடல் வரை தடுப்பு சுவர் கட்டி காந்தி மைதானம் விரிவாக்கம் செய்யப்படும். டென்னிஸ் கோர்ட், 400 மீட்டர் ஓடு தளம் போன்றவை அமைக்கவும், மைதானத்தில் உள்ள தரையை சீரமைத்து புல் தரையாக மாற்றவும் நடவடிக்கை எடுக்கப்படும். இதேபோல், வீரர்களுக்கான சீருடை மாற்றும் அறை, கழிப்பிட வசதி, பார்வையாளர்கள் அரங்கம் கட்டப்படும். இதற்கான திட்ட அறிக்கையை தயார் செய்து தமிழக விளையாட்டு துறை அமைச்சருக்கு சமர்ப்பிக்கப்படும். அதன் பின்னர் நிதி ஒதுக்கி காந்தி மைதானம் சர்வதேச தரத்திற்கு மேம்படுத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.


Next Story