மாற்றிடம் வழங்கும் திட்டத்தை முழுமையாக நிறைவேற்றும் வரை அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும், முதுமலை மக்கள் கோரிக்கை


மாற்றிடம் வழங்கும் திட்டத்தை முழுமையாக நிறைவேற்றும் வரை அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும், முதுமலை மக்கள் கோரிக்கை
x
தினத்தந்தி 4 Aug 2018 4:30 AM IST (Updated: 4 Aug 2018 12:12 AM IST)
t-max-icont-min-icon

மாற்றிடம் வழங்கும் திட்டத்தை முழுமையாக நிறைவேற்றும் வரை அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும் என சிறப்பு கிராம சபை கூட்டத்தில் முதுமலை மக்கள் கோரிக்கை விடுத்தனர்.

கூடலூர்,

நீலகிரி மாவட்டம் கூடலூர் தாலுகா முதுமலை ஊராட்சியில் சிறப்பு கிராம சபை கூட்டம் நேற்று பகல் 11 மணிக்கு முதுகுளியில் உள்ள ஊராட்சி அலுவலக வளாகத்தில் நடைபெற்றது. கூட்டத்துக்கு ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் மோகன் தலைமை தாங்கினார். ஊராட்சியின் மூத்த உறுப்பினர் பாலகிருஷ்ணன், வனச்சரகர் தயாளன், வனவர் முத்துலிங்கராமன், வன காப்பாளர் ஹாலன் உள்பட பல்வேறு துறைகளை சேர்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் முதுகுளி, கல்லஞ்சேரி, நாகம்பள்ளி, மூர்த்திகண்டி, கூவக்கொல்லி உள்பட குக்கிராமங்களை சேர்ந்த மக்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் 100 நாட்கள் வேலை வழங்கும் திட்டத்தின் கீழ் உள்ள பயனாளிகள் பற்றி விவாதிக்கப்பட்டது. அப்போது ஊராட்சி பகுதியில் 100 நாட்கள் வேலை வழங்கும் திட்டத்தை முழுமையாக நிறைவேற்ற வேண்டும் என கிராம மக்கள் வலியுறுத்தினர்.

முதுமலை புலிகள் காப்பக வனத்தில் ஊராட்சி உள்ளதால் 100 நாட்கள் வேலை வழங்கும் திட்டத்தின் கீழ் குளங்கள் தோண்டப்படுகிறது. மிக ஆழமாக குளங்கள் வெட்டுவதால் வனவிலங்குகள் தவறி உள்ளே விழ வாய்ப்பு உள்ளது. எனவே ஆழம் குறைவான குளங்களை தோண்ட வேண்டும் என வனத்துறை தரப்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டது. இதற்கு கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். ஏற்கனவே விவசாயம் பாதிக்கப்பட்டு உள்ளது. இதனால் கூலி வேலைக்கு சென்று பிழைக்க வேண்டிய நிலை உள்ளது. தற்போது பருவமழை பரவலாக பெய்து வருகிறது. இதனால் குளங்கள் அதிகளவு தோண்டினால் மட்டுமே இனி வரும் நாட்களில் விவசாயம் எந்த பாதிப்பும் இன்றி நடைபெறும்.

எனவே முதுமலை மக்களுக்கு மாற்றிடம் வழங்கும் திட்டத்தை வனத்துறையினர் முழுமையாக நிறைவேற்றும் வரை இப்பகுதி மக்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும். குறிப்பாக 100 நாட்கள் வேலை வழங்கும் திட்டத்தின் கீழ் அதிக பணிகள் நடைபெற வனத்துறையினர் ஒத்துழைக்க வேண்டும் என ஊராட்சி மக்கள் கோரிக்கை விடுத்தனர். தொடர்ந்து குடிநீர், மின்சாரம், சாலை, தெருவிளக்கு உள்ளிட்ட வளர்ச்சி பணிகள் செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். வனவிலங்குகள் விவசாய பயிர்கள், கால்நடைகளை தாக்குவதை தடுக்க வேண்டும் என கிராம மக்கள் வலியுறுத்தினர்.


Next Story