முன்னாள் பெண் கவுன்சிலர் சரமாரி குத்திக்கொலை கடன் தகராறில் தீர்த்துக்கட்டியதாக கூறிய வாலிபர் வி‌ஷம் குடித்ததால் பரபரப்பு


முன்னாள் பெண் கவுன்சிலர் சரமாரி குத்திக்கொலை கடன் தகராறில் தீர்த்துக்கட்டியதாக கூறிய வாலிபர் வி‌ஷம் குடித்ததால் பரபரப்பு
x
தினத்தந்தி 4 Aug 2018 3:30 AM IST (Updated: 4 Aug 2018 12:31 AM IST)
t-max-icont-min-icon

நெல்லை அருகே முன்னாள் பெண் கவுன்சிலர் சரமாரியாக குத்திக்கொலை செய்யப்பட்டார்.

கடையம்,

நெல்லை அருகே முன்னாள் பெண் கவுன்சிலர் சரமாரியாக குத்திக்கொலை செய்யப்பட்டார். வங்கிக்கடன் பெற்று தருவதாக கூறி ஏமாற்றிய தகராறில் அவரை தீர்த்துக்கட்டியதாக கூறிய வாலிபர் வி‌ஷம் குடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

முன்னாள் பெண் கவுன்சிலர்

நெல்லை மாவட்டம் கடையம் அருகே உள்ள அருணாச்சலம்பட்டி பங்களா தோட்டம் தெருவை சேர்ந்தவர் செல்வன் (வயது 45). முன்னாள் ராணுவ வீரர். இவருக்கும், அதே பகுதி தெற்கு தெருவை சேர்ந்த தனலட்சுமி மரியதீபா என்பவருக்கும் (40) கடந்த 2000–ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. தனலட்சுமி, கடந்த உள்ளாட்சி தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் மாவட்ட கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

இந்த நிலையில் கணவன்–மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருவரும் கடந்த 3 ஆண்டுகளாக பிரிந்து வாழ்ந்து வந்தனர். இதனால் தனலட்சுமி தனது தாயுடன் வசித்து வந்தார். இவர் 10 வயதில் ஒரு பெண் குழந்தையை தத்தெடுத்து வளர்த்து வந்தார். செல்வன் விவாகரத்து கேட்டு அம்பை கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கு நிலுவையில் உள்ளது.

சரமாரி குத்திக்கொலை

நேற்று காலை தனலட்சுமி அவரது வீட்டுக்குள் சரமாரியாக கத்தியால் குத்தப்பட்டு ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார். இந்த பயங்கர கொலை குறித்து தகவல் அறிந்ததும் அம்பை துணை போலீஸ் சூப்பிரண்டு ஜாகீர் உசேன், கடையம் இன்ஸ்பெக்டர் ஆதிலட்சுமி, சப்–இன்ஸ்பெக்டர் பாரத் லிங்கம் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பார்வையிட்டனர்.

நெல்லையை சேர்ந்த ‘ரிக்கி‘ என்ற மோப்பநாய் வரவழைக்கப்பட்டு சோதனை நடத்தப்பட்டது. மோப்பநாய் அங்கு மோப்பம் பிடித்துவிட்டு செல்வன் வீடு வரை ஓடிச்சென்று நின்று விட்டது. தடயவியல் நிபுணர்களும் ஆய்வு செய்தனர். பின்னர் தனலட்சுமியின் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அம்பை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

வி‌ஷம் குடித்து தற்கொலைக்கு முயற்சி

சம்பவ இடத்தில் கிடந்த கத்தியையும், தனலட்சுமியின் வீட்டு முன்பாக நின்ற மோட்டார்சைக்கிளையும் போலீசார் கைப்பற்றினர். விசாரணையில், அந்த மோட்டார் சைக்கிள் கடையம் மெயின் ரோட்டில் டைல்ஸ் கடை நடத்தி வரும் ஆதி என்பவரின் மகன் சுரேஷ் (35) என்பவருக்கு சொந்தமானது என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் தேடி வந்தனர்.

இதற்கிடையே, சுரேஷ் திடீரென வி‌ஷம் குடித்தார். அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு அம்பை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இதுபற்றிய தகவலின் பேரில் போலீசார் ஆஸ்பத்திரிக்கு சென்று விசாரணை நடத்தினர்.

காரணம் என்ன?

விசாரணையில், தனக்கு வங்கிக்கடன் வாங்கி தருவதாக கூறி தனலட்சுமி தன்னை ஏமாற்றியதாகவும், இதனால் ஏற்பட்ட தகராறில் கத்தியால் அவரை குத்திக்கொலை செய்ததாகவும் சுரேஷ் கூறியுள்ளார். மேலும் தன்னுடைய மோட்டார்சைக்கிளை தனலட்சுமியின் வீட்டின் முன்பு நிறுத்தியிருந்ததால் எப்படியும் போலீசார் தன்னை பிடித்து விடுவார்கள் என பயந்து தற்கொலைக்கு முயன்றதாக சுரேஷ் கூறியதாகவும் போலீசார் தெரிவித்தனர். மேலும் தனலட்சுமியின் கணவர் செல்வனும் தலைமறைவாக உள்ளார்.

எனவே, தனலட்சுமியை சுரேஷ்தான் கொலை செய்தாரா? அல்லது தனலட்சுமிக்கும், அவரது கணவர் செல்வனுக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கொலை செய்யப்பட்டாரா? என்ற பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். முன்னாள் பெண் கவுன்சிலர் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டதும், அவரை தீர்த்துக்கட்டியதாக கூறிய வாலிபர் வி‌ஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றதும் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story