மானாமதுரையில் தரமற்ற பொருட்களால் கட்டப்படும் அரசுப்பள்ளி கட்டிடம், பொதுமக்கள் குற்றச்சாட்டு
மானாமதுரை அரசு பெண்கள் பள்ளியில் கூடுதல் கட்டிடங்கள், தரமற்ற கட்டுமான பொருட்களை கொண்டு கட்டப்படுவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
மானாமதுரை,
மானாமதுரையில் அரசு பெண்கள் பள்ளி கடந்த 1961–ம் ஆண்டு தொடங்கப்பட்டது. மானாமதுரையை மையமாக கொண்டு செயல்படும் ஒரே பெண்கள் அரசுப்பள்ளியாக இது உள்ளது. இதனால் மானாமதுரை மற்றும் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த மாணவிகள் அதிக அளவில் இங்கு பயின்று வருகின்றனர். இப்பள்ளி 1973–ம் ஆண்டு உயர்நிலைப்பள்ளியாகவும், அதன்பிறகு 1983–ம் ஆண்டு மேல்நிலைப்பள்ளியாகவும் தரம் உயர்த்தப்பட்டது. 1¼ ஏக்கர் பரப்பளவில் செயல்பட்டு வரும் இப்பள்ளியில் 1,710 மாணவிகள் தற்போது கல்வி பயின்று வருகின்றனர். 63 ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர். ஆனால் போதிய வகுப்பறைகள் இன்றி மாணவிகள் அவதியடைந்து வந்தனர். மேலும் கூடுதல் வகுப்பறைகள் இல்லாததால் மாணவிகள் மரத்தடியில் பாடம் பயின்று வருகின்றனர்.
இதனால் இப்பள்ளியில் கூடுதல் வகுப்பறைகள் வேண்டும் என பல ஆண்டுகளாக வலியுறுத்தப்பட்டு வந்தது. அதற்கு பலனாக நபார்டு வங்கி திட்டத்தின்கீழ் ரூ.3 கோடியே 36 லட்சம் செலவில் புதிய கட்டிடங்கள் கட்ட முடிவு செய்யப்பட்டது. அதன்படி தற்போது பள்ளியில் கூடுதல் வகுப்பறைகளுக்கான கட்டுமான பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. 3 தளத்தில் 18 வகுப்பறைகள், 2 ஆய்வகங்கள், 4 கழிப்பறைகள் என கட்டப்பட்டு வருகின்றன. இந்தநிலையில் கட்டுமான பணியில் பயன்படுத்தப்படும் சிமெண்டு, கட்டிட இரும்பு கம்பிகள், எம்–சாண்ட் மணல் உள்ளிட்ட பல பொருட்கள் தரமின்றி இருப்பதாக பொதுமக்கள் தரப்பில் குற்றம் சாட்டப்படுகிறது.
இதுகுறித்து கலெக்டர் அலுவலகத்தில் புகார் மனு கொடுக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக கட்டுமான கோட்ட பொறியாளர் கவுதமன் கூறுகையில், அரசின் வழிகாட்டுதல்படியும், அரசின் சட்டதிட்டங்களுக்கு உட்பட்டும் உரிமம் மற்றும் தரச்சான்று பெற்ற பொருட்களை பயன்படுத்தி கட்டுமான பணிகள் நடைபெறுகின்றன. இதில் தரமற்ற பொருட்கள் என்ற பேச்சுக்கே இடமில்லை. ஓராண்டிற்குள் பணிகள் முடித்து கட்டிடங்களை திறக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம் என்றார். இருப்பினும் மாவட்ட நிர்வாகம் கட்டுமான பணிகளை கண்காணித்து பொதுமக்களின் அச்சத்தை போக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.