வீட்டுக்குள் லாரி புகுந்தது மெக்கானிக் பலி; இளம்பெண் படுகாயம்
திருத்துறைப்பூண்டியில் வீட்டுக்குள் லாரி புகுந்ததில் மெக்கானிக் இறந்தார். இளம்பெண் படுகாயமடைந்தார். மேலும் சைக்கிள்கடை- கூரைவீடு நாசமடைந்தது.
திருத்துறைப்பூண்டி,
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே உள்ள பள்ளங்கோவில் மாதா கோவில் மெயின்ரோட்டை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன் (வயது 55). இவர் திருத்துறைப்பூண்டியில் உள்ள தனியார் கியாஸ் நிறுவனத்தில் மெக்கானிக்காக வேலை பார்த்து வந்தார். இவருக்கு தாமரைசெல்வி என்ற மனைவியும், ஒரு மகளும், ஒரு மகனும் உள்ளனர். இந்த நிலையில் நேற்று ராமகிருஷ்ணன் வீட்டு வாசலில் நின்று கொண்டிருந்தார். அப்போது திருத்துறைப் பூண்டியில் இருந்து திருச்சி நோக்கி சென்ற லாரி திடீரென கட்டுப்பாட்டை இழந்து ராம கிருஷ்ணன் வீட்டுக்குள் புகுந்தது.
இதில் வீட்டு வாசலில் நின்று கொண்டிருந்த ராமகிருஷ்ணன் லாரியின் அடியில் சிக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். ராமகிருஷ்ணன் வீட்டுக்கு வந்த பள்ளங்கோவில் மாதா தெருவை சேர்ந்த சத்யா (17) படுகாயம் அடைந்தார். லாரி புகுந்ததில் ராமகிருஷ்ணனின் மாடி வீடு சேதம் அடைந்தது. மேலும் அருகில் இருந்த சந்தானம் என்பவரின் சைக்கிள் கடையும், கூரை வீடும் முற்றிலும் சேதம் அடைந்தது. சத்யா சிகிச்சைக்காக திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் அவர்
மேல் சிகிச்சைக்காக திருவாரூர் மருத்துவகல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சம்பவ இடத்தில் இருந்து லாரி டிரைவர் தப்பி ஓடி விட்டார். இதுகுறித்து திருத்துறைப்பூண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய லாரி டிரைவரை தேடி வருகின்றனர். மேலும் ராமகிருஷ்ணன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
Related Tags :
Next Story