மாசு கட்டுப்பாட்டு வாரிய நிபந்தனைகளால் நெசவு தொழில் முடங்கும், சாயப்பட்டறை உரிமையாளர்கள் அதிருப்தி


மாசு கட்டுப்பாட்டு வாரிய நிபந்தனைகளால் நெசவு தொழில் முடங்கும், சாயப்பட்டறை உரிமையாளர்கள் அதிருப்தி
x
தினத்தந்தி 4 Aug 2018 4:15 AM IST (Updated: 4 Aug 2018 1:04 AM IST)
t-max-icont-min-icon

மாசுகட்டுப்பாட்டு வாரியத்தின் நிபந்தனைகளால் நெசவு தொழில் முடங்கும் என்று சாயப்பட்டறை உரிமையாளர்கள்அதிருப்தி தெரிவித்துள்ளனர். அனைவரையும் ஒன்று திரட்டி வேலை நிறுத்தம் செய்வது குறித்து ஆலோசனை நடத்தியுள்ளனர்.

அருப்புக்கோட்டை,

அருப்புக்கோட்டையில் ஏராளமான குடும்பங்கள் நெசவு தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் சாயப்பட்டறையில் இருந்து வெளியேறும் கழிவு நீரால் நிலத்தடி நீர், விவசாயம் பாதிக்கப்படுவதாக மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகளுக்கு வந்த புகாரை அடுத்து 2 வாரத்துக்கு முன்பு இரவோடு இரவாக சாயப்பட்டறைகளின் மின் இணைப்பை மின் வாரிய அதிகாரிகள் துண்டித்தனர். இதனால் நெசவாளர்கள் மற்றும் அதனை சார்ந்த குடும்பங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. கஞ்சித்தொட்டி திறக்கும் நிலை ஏற்பட்டு இருப்பதாக தெரிவித்தனர்.

இதனைதொடர்ந்து கலெக்டர் சிவஞானம் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது. போலீஸ் சூப்பிரண்டு ராஜராஜன், கோட்டாட்சியர், மாசுகட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள், தாசில்தார், நகராட்சி அதிகாரிகள், மின்வாரிய அதிகாரிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் நெசவாளர் குடும்பங்கள் பாதிக்காத வகையில் நெசவு தொழிலை மேம்படுத்த அதிகாரிகள் வழிவகை மேற்கொள்ள வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

இது குறித்து சாயச்சாலை சங்க உரிமையாளர்களை அழைத்து மாசுகட்டுப்பாட்டு வாரிய துறை அதிகாரிகள் பேச்சு நடத்தினர். அப்போது அதிகாரிகள் கூறியதாவது:-

சாயப்பட்டறை வைத்து தொழில் செய்பவர்கள் முறைப்படி ஊருக்கு வெளியில் உள்ள ஓரிடத்தில் சுத்திகரிப்பு நிலையம் அமைத்து 1 வருட காலத்திற்குள் வெளியேற வேண்டும். அதற்கு உத்தரவாதமாக ஒவ்வொருவரும் ரூ.20 பாண்டு பத்திரத்தில் நோட்டரி பப்ளிக்கின் கையெழுத்திட்டு தர வேண்டும். மேலும் மாதம் ஒரு முறை சுத்திகரிப்பு நிலையம் அமைப்பதற்கான நடைமுறைகள் குறித்து எங்களுக்கு அறிக்கை அளிக்க வேண்டும். அவ்வாறு கொடுக்கும் பட்சத்தில் சாயப்பட்டறைகளின் மின் இணைப்பு உடனடியாக வழங்கப்படும். இவ்வாறு கூறினர். ஆனால் இதனை ஏற்க சாயச்சாலை சங்க உரிமையாளர்கள் முன்வரவில்லை.

இதுதொடர்பாக சாயப்பட்டறை உரிமையாளர்கள், நெசவாளர்கள் கூறுகையில், மாசு கட்டுப்பாட்டு வாரியத்தினால் விதிக்கப்படும் நிபந்தனைகள் அனைத்தும் தொழிலை முடக்கும் நிலையிலேயே உள்ளது. நகரின் வாறுகால் ஓடும் கழிவு நீர் மாசுவை விட எங்களது சாயக்கழிவு நீரில் மாசு இல்லை. நெசவாளர்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு நகராட்சி அதிகாரிகள் சுக்கிலநத்தம் குப்பை கிடங்கு அருகே இடம் அல்லது அவர்களே சுத்திகரிப்பு நிலையம் அமைத்து லிட்டருக்கு என ஒரு வரியை விதித்து சாயக்கழிவுகளை சுத்திகரிப்பு செய்து அதற்கான வரியை எங்களிடம் வசூல் செய்வதற்கான வழிமுறைகளை மேற்கொள்ளலாம் என்றனர்.

மேலும் இந்த நிபந்தனை குறித்து சாயப்பட்டறை உரிமையாளர்கள் நேற்று காலை அருப்புக்கோட்டையில் ஆலோசனை நடத்தினர். இதில் தொழிலில் தொடர்புடைய அனைவரையும் ஒன்று திரட்டி வேலை நிறுத்தம் செய்வது குறித்து விவாதிக்கப்பட்டது. இந்த நிலையில் விசைத்தறி தொழிலாளர்கள் சார்பிலும் தனியாக ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டுள்ளது.

Next Story