சிலை கடத்தல் வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்றிய உத்தரவை ரத்து செய்ய வேண்டும், அர்ஜூன் சம்பத் பேட்டி


சிலை கடத்தல் வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்றிய உத்தரவை ரத்து செய்ய வேண்டும், அர்ஜூன் சம்பத் பேட்டி
x
தினத்தந்தி 4 Aug 2018 4:15 AM IST (Updated: 4 Aug 2018 1:25 AM IST)
t-max-icont-min-icon

சிலை கடத்தில் வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்றிய உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜூன் சம்பத் கூறினார்.

அறச்சலூர்,

சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் நினைவு தினம் ஈரோடு மாவட்டம் அறச்சலூர் அருகே ஓடாநிலையில் உள்ள மணிமண்டபத்தில் நேற்று கடைபிடிக்கப்பட்டது. இதில் இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜூன்சம்பத் கலந்துகொண்டு தீரன் சின்னமலையின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதன்பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:– கொங்கு இன மக்களை பற்றி தவறான கருத்து வெளியிட்ட மாதொருபாகன் புத்தகத்தை தமிழக அரசு தடை செய்ய வேண்டும்.

அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் தமிழக அரசின் பெரும்பான்மையான வருவாயை சம்பளமாக பெற்று வருகிறார்கள் என்கிற உண்மையை முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறி உள்ளார். அவருடைய கருத்தை வரவேற்கிறோம். இவ்வாறு கூறியதுடன் நிறுத்திவிடாமல் நிர்வாக நடவடிக்கையிலும் மாற்றத்தை கொண்டுவர வேண்டும்.

சிலை கடத்தல் வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றியதை கண்டிக்கிறோம். பொன் மாணிக்கவேல் இந்த வழக்கில் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். அவர் 6 மாதங்களில் ஓய்வு பெற உள்ளதாக கூறி வழக்கில் இருந்து விடுவிப்பது ஏற்க முடியாது. அவருக்கு பதவி நீட்டிப்பு செய்து சிலை கடத்தல் வழக்கை தொடர்ந்து விசாரிக்க அனுமதிக்க வேண்டும். எனவே சிலை கடத்தல் வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்றியதற்கான உத்தரவை உடனடியாக ரத்து செய்ய வேண்டும். மேலும் இந்து சமய அறநிலையத்துறை ஆணையாளர் பொறுப்பையும் அவருக்கு கொடுக்க வேண்டும்.

இவ்வாறு அர்ஜூன் சம்பத் கூறினார்.


Next Story