கைதான அறநிலையத்துறை கூடுதல் ஆணையரை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க மனு தாக்கல்
சிலை செய்ததில் நடந்த முறைகேடு புகாரில் கைதான இந்து சமய அறநிலையத்துறை கூடுதல் ஆணையரை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க கும்பகோணம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அவர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு இருப்பதால் மனு மீது விசாரணை நடத்தாமல் நீதிபதி ஒத்தி வைத்தார்.
கும்பகோணம்,
காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் சோமாஸ்கந்தர் சிலை செய்ததில் முறைகேடு நடந்தது தொடர்பாக இந்து சமய அறநிலையத்துறையின் கூடுதல் ஆணையர் கவிதாவை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் கடந்த மாதம்(ஜூலை) 31-ந் தேதி கைது செய்தனர். கைது செய்யப்பட்ட கவிதா திருச்சி மகளிர் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார்.
இந்த நிலையில் சிறையில் உள்ள கவிதாவிடம் மேற்கொண்டு விசாரணை நடத்த வேண்டி இருப்பதால் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் கும்பகோணம் கூடுதல் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் நேற்று மனு தாக்கல் செய்தனர்.
இதற்கிடையில் திருச்சி சிறையில் உள்ள கவிதா உடல் நலக்குறைவால் சிறை வளாகத்தில் உள்ள ஆஸ்பத்திரியில் உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
எனவே அவரை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்கக்கோரிய மனு மீது விசாரணை நடத்தாமல், தேதி குறிப்பிடாமல், நீதிபதி ஒத்தி வைத்தார்.
Related Tags :
Next Story