வீட்டிலேயே புதைகுழி தோண்டிய வயதான தம்பதி
மகன் கவனிக்காததால் தனது வீட்டிலேயே வயதான தம்பதி புதைகுழி தோண்டி உள்ளனர். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
குறிஞ்சிப்பாடி,
கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி அருகே உள்ள பரதம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் சாரங்கபாணி(வயது 83). இவருடைய மனைவி தனலட்சுமி(70). இவர்களுக்கு பாலசுப்பிரமணியன் என்ற மகனும், சாந்தகுமாரி என்ற மகளும் உள்ளனர். சேத்தியாத்தோப்பு அருகே உள்ள கத்தாழை கிராமத்தை சேர்ந்த ஒருவருக்கு சாந்தகுமாரியை திருமணம் செய்து வைத்தனர். பாலசுப்பிரமணியன் பரதம்பட்டு கிராமத்தில் தனது மனைவி, குழந்தைகளுடன் தனி வீட்டில் வசித்து வருகிறார்.
சாரங்கபாணிக்கு சொந்தமான நிலத்தை, பாலசுப்பிரமணியன் எழுதி வாங்கி விட்டதாக கூறப்படுகிறது. ஆனால் சாரங்கபாணியையும், தனலட்சுமியையும் அவர் கவனிப்பதில்லை. அவர்களுக்கு செலவுக்கு பணம், உணவு கொடுப்பதில்லை. இதனால் வயதான அந்த தம்பதி, பசிக்கு சாப்பிட கூட வழியின்றி அவதிப்பட்டனர்.
இந்த நிலையில் சாரங்கபாணியும், தனலட்சுமியும் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தனர். இதற்காக அந்த தம்பதியினர் வீட்டிலேயே புதை குழி தோண்டி உள்ளனர். இது பற்றி சாரங்கபாணி தனது உறவினர்களை செல்போனில் தொடர்பு கொண்டு, என்னையும், எனது மனைவியையும் பாலசுப்பிரமணியன் கவனிக்கவில்லை. இதனால் வீட்டிலேயே புதைகுழி தோண்டி உள்ளோம். அதில் விழுந்து, எங்கள் மீது நாங்களே மண்ணை போட்டு தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்துள்ளோம். நாங்கள் இறந்தபிறகு, அந்த குழியிலேயே போட்டு மூடிவிடுங்கள் என்று கூறி உள்ளார். இதையடுத்து உறவினர்கள் நேரில் வந்து, சாரங்கபாணி-தனலட்சுமி தம்பதியை சமாதானப்படுத்தினர்.
இதற்கிடையில் இந்த சம்பவம் குறித்து குறிஞ்சிப்பாடி போலீஸ் நிலையத்துக்கு தகவல் வந்தது. அதன்பேரில் இன்ஸ்பெக்டர் ராமதாஸ் மற்றும் போலீசார் விரைந்து சென்று சாரங்கபாணியையும், தனலட்சுமியையும் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் கண்கலங்கியபடி போலீசாரின் கேள்விகளுக்கு பதில் கூறினர். அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story