ரங்கசாமியின் பிறந்தநாளை நலத்திட்டங்கள் வழங்கி கொண்டாடுவோம், பொதுச்செயலாளர் பாலன் அறிக்கை


ரங்கசாமியின் பிறந்தநாளை நலத்திட்டங்கள் வழங்கி கொண்டாடுவோம், பொதுச்செயலாளர் பாலன் அறிக்கை
x
தினத்தந்தி 3 Aug 2018 11:00 PM GMT (Updated: 3 Aug 2018 8:35 PM GMT)

ரங்கசாமியின் பிறந்தநாளை நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாடுவோம் என்று என்.ஆர்.காங்கிரஸ் பொதுச்செயலாளர் பாலன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

புதுச்சேரி,

புதுவை முன்னாள் முதல்-அமைச்சரும், என்.ஆர்.காங்கிரஸ் கட்சி நிறுவன தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான ரங்கசாமிக்கு இன்று (சனிக்கிழமை) பிறந்தநாள் ஆகும். இந்த பிறந்தநாளை சிறப்பாக கொண்டாட என்.ஆர்.காங்கிரசார் ஏற்பாடுகளை செய்துள்ளனர். காலையில் தொண்டர்கள் மத்தியில் ரங்கசாமி பிறந்தநாள் கேக் வெட்டுகிறார்.

தொகுதிதோறும் அன்ன தானம், மாணவ, மாணவிகளுக்கு நோட்டு, புத்தகம், கோவில்களில் சிறப்பு பூஜை, ஏழைகளுக்கு அன்னதானம் வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ரங்கசாமியின் பிறந்தநாளையொட்டி அவருக்கு வாழ்த்து தெரிவித்து புதுவையின் பல்வேறு பகுதிகளில் ஆங்காங்கே பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன. காமராஜருடன் ரங்கசாமி இருப்பது போன்றும், பாகுபலி உருவத்திலும், ரஜினியின் காலா ஸ்டைலிலும் அவரது ஆதரவாளர்கள் பேனர்களை வைத்துள்ளனர்.

ரங்கசாமியின் பிறந்தநாளை நலத்திட்டங்கள் வழங்கி கொண்டாடுவோம் என்று என்.ஆர்.காங்கிரஸ் பொதுச்செயலாளர் பாலன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

என்.ஆர்.காங்கிரஸ் பொதுச்செயலாளர் பாலன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

அகில இந்திய என்.ஆர்.காங்கிரஸ் பேரியக்கத்தின் நிறுவன தலைவர், மக்கள் மனதில் நிரந்தரமாக குடியிருக்கும் நம் அன்பு தலைவருக்கு இன்று பிறந்தநாள். புதுச்சேரி மாநில அரசியலில் ஒரு முக்கிய காலகட்டத்தில் இப்பிறந்த நாளை நாம் எதிர்கொள்கிறோம்.

மக்கள் மாற்றத்தை எதிர்நோக்கி இருக்கிறார்கள். மணலை மாணிக்கமென்றும், கண்ணாடியை வைரமென்றும், கருங்கல்லை பளிங்கென்றும், கானல்நீரை கருத்தோவியம் என்றும் ஏமாந்துவிட்டோமே என்று அவர்கள் உணர்ந்துவிட்டார்கள்.

நல்லாட்சி நாயகர், நிர்வாக சாதுர்யன், தேடித்தேடி நலத்திட்டங்களை வாரி வழங்கிய வள்ளல் ரங்கசாமி என்று ஆளவருவார் என்று ஏங்கிக்கொண்டிருக்கும் சூழலில் அவரது பிறந்தநாள் வருகிறது.

இந்த நல்வாய்ப்பினை பயன்படுத்த நம் இயக்க தோழர்களும், பொதுமக்களை அரவணைத்து சிறப்பாக கொண்டாட வேண்டும். ஊரெங்கும் தோரணங்கள், கொடியேற்றம், நலத்திட்டங்கள், மாணவர் களுக்கு உதவிகள், சர்வசமய பிரார்த்தனைகள், அன்னதானம் வழங்கி ஒட்டுமொத்த புதுவை மாநிலமே எழுச்சிகொள்ள வேண்டும்.

இன்று காலை கதிர்காமம் ஸ்ரீமுருகப்பெருமாள் கோவில், அப்பா பைத்திய சுவாமிகள் கோவில் மற்றும் என்.ஆர்.காங்கிரஸ் தலைமை அலுவலகத்திலும் அன்ன தானம் நடக்கிறது.

இவ்வாறு அந்த அறிக்கையில் பாலன் கூறியுள்ளார்.

Next Story