மனைவிக்கு வீட்டிலேயே பிரசவம் பார்த்த என்ஜினீயர்
தேனி அருகே என்ஜினீயர் ஒருவர் தனது மனைவிக்கு வீட்டிலேயே பிரசவம் பார்த்தார். அழகான ஆண் குழந்தை பிறந்த நிலையில் நச்சுக்கொடியை அகற்றுவதற்கு அவர் எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
தேனி,
திருப்பூர் புதுப்பாளையம் அருகே உள்ள ரத்தினகிரீஸ்வரர் நகரில் கடந்த 22-ந்தேதி ‘யூ டியூப்’ என்ற சமூக வலைத்தளத்தில் வீடியோவை பார்த்து பிரசவம் பார்த்தபோது கிருத்திகா (வயது 28) என்ற ஆசிரியை பலியானார். அவருக்கு பெண் குழந்தை பிறந்த நிலையில், அதிகப்படியான ரத்தப் போக்கு ஏற்பட்டு அவர் உயிர் இழந்தார். இந்த சம்பவம் குறித்து திருப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவருடைய கணவர் கார்த்திகேயனை கைது செய்தனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த சம்பவத்தை தொடர்ந்து வீடியோ பார்த்து வீட்டில் பிரசவம் பார்ப்பதை தடுக்க வேண்டும் என்றும், டாக்டர்களின் ஆலோசனை படி கர்ப்பிணிகள் நடந்துகொள்ள வேண்டும் என்றும் சுகாதாரத்துறை சார்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தேனி மாவட்டத்தில் என்ஜினீயர் ஒருவர் தனது மனைவிக்கு வீட்டிலேயே பிரசவம் பார்த்த சம்பவம் நடந்துள்ளது.
அதுகுறித்த விவரம் வருமாறு:-
தேனி அருகே உள்ள கோடாங்கிபட்டி தென்றல் நகரை சேர்ந்தவர் தனுஷ்கோடி. இவர் பெட்டிக்கடை வைத்து நடத்தி வருகிறார். இவருக்கு 2 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். கடைசி மகன் கண்ணன் (29). இவர், என்ஜினீயரிங் படித்து முடித்து விட்டு, எலக்ட்ரிக்கல் வேலையை ஒப்பந்தம் எடுத்து செய்து கொடுத்து வருகிறார். இவருடைய மனைவி மகாலட்சுமி (25). இவர் எம்.பி.ஏ. பட்டதாரி. இவர்கள் இருவரும் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.
இந்த நிலையில், மகாலட்சுமி நிறைமாத கர்ப்பிணியாக இருந்தார். ஆனால் கணவன், மனைவி இருவரும் சுகப்பிரசவம் ஆக வேண்டும் என்றே விரும்பினர். கடந்த வாரம் இவருக்கு குழந்தை பிறக்கும் என்று டாக்டர் தேதி குறித்து கொடுத்து இருந்ததாக கூறப்படுகிறது. ஆனால், குறிப்பிட்ட நாளில் குழந்தை பிறக்கவில்லை. தொடர்ந்து மகாலட்சுமி, மருத்துவமனைக்கு செல்ல மறுத்ததாக கூறப்படுகிறது.
இதனால், கடந்த வாரம் தனுஷ்கோடி பழனிசெட்டிபட்டி போலீஸ் நிலையத்தில் இதுகுறித்து புகார் அளித்தார். போலீசாரும், மருத்துவத்துறை அதிகாரிகளும் அவருடைய வீட்டுக்கு சென்றனர். அப்போது அவர் பிடிவாதமாக மருத்துவமனைக்கு செல்ல மறுத்ததுடன், தனது மனைவிக்கு அறுவை சிகிச்சை இல்லாமல் சுகப்பிரசவமே பார்க்க விரும்புவதாக கூறியதாக தெரிகிறது.
இதையடுத்து ‘குறிப்பிட்ட நாளில் பிரசவத்துக்காக மருத்துவமனைக்கு செல்லாததால் ஏதாவது பிரச்சினை ஏற்படும்பட்சத்தில் அதற்கு நாங்கள் பொறுப்பேற்று கொள்கிறோம்’ என இருவரும் மருத்துவத்துறை அதிகாரிகளிடம் எழுதி கொடுத்தனர். அதை வாங்கிக் கொண்டு அதிகாரிகள் அங்கிருந்து சென்றனர்.
அதற்கு பிறகும் இருவரும் மருத்துவமனைக்கு செல்லாமல் இருந்துள்ளனர். இந்நிலையில், நேற்று முன்தினம் மகாலட்சுமிக்கு பிரசவ வலி ஏற்பட்டது. இதையடுத்து கண்ணன் தனது வீட்டில் வைத்தே மகாலட்சுமிக்கு பிரசவம் பார்த்துள்ளார். இரவு 11.52 மணியளவில் அவருக்கு அழகானஆண்குழந்தைபிறந்தது.
ஆனால், அவர் குழந்தையின் தொப்புள் கொடியுடன் இணைந்துள்ள நச்சுக் கொடியை அகற்றாமல் வைத்துள்ளதாக போலீசாருக்கும், மருத்துவத்துறைக்கும் தகவல் கிடைத்தது. இதையடுத்து 108 ஆம்புலன்ஸ் மற்றும் தாய்- சேய் நல ஆம்புலன்சுடன் மருத்துவத்துறையினர் சம்பவ இடத்துக்கு சென்றனர். நச்சுக் கொடியை அகற்ற வேண்டும் என்றும், குழந்தையின் உடல் நிலையை பரிசோதனை செய்ய வேண்டும் என்றும் மருத்துவக்குழுவினர் தெரிவித்தனர். ஆனால், அதற்கு கண்ணனும், மகாலட்சுமியும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து மருத்துவ குழுவினர் அவரது வீட்டின் அருகிலேயே வெகுநேரம் காத்திருந்தனர்.
இதைத்தொடர்ந்து மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குனர் டாக்டர் வரதராஜன் மற்றும் பழனிசெட்டிபட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிமாறன், அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராமலட்சுமி, வருவாய்த்துறை அதிகாரிகள் அங்கு வந்து அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். நச்சுக் கொடியை அகற்றாவிட்டால் குழந்தைக்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளதாகவும், அதற்கு ஒத்துழைப்பு வழங்குமாறும் கேட்டனர். ஆனாலும், அவர்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
பின்னர், குழந்தையின் உடல் நிலையை பரிசோதிக்க வேண்டும் என மருத்துவக்குழுவினர் கேட்டபோது ஆங்கில மருத்துவத்தின் மூலம் எந்த பரிசோதனையும் செய்யக்கூடாது என்றும், சித்த மருத்துவர்கள் வந்தால் குழந்தையை பரிசோதனை செய்ய அனுமதிப்பதாகவும் அவர்கள் தெரிவித்தனர். இதையடுத்து போடேந்திரபுரம் வட்டார துணை மருத்துவ அலுவலர் திலகவதி, காமயகவுண்டன்பட்டி அரசு ஆரம்ப சுகாதாரநிலைய சித்த மருத்துவர் சிராஜூதீன் தலைமையில் சித்த மருத்துவக்குழுவினர் அங்கு வரவழைக்கப்பட்டனர்.
Related Tags :
Next Story