மாலூர் டவுனில் பள்ளி மாணவி கொலையில் கட்டிட தொழிலாளி கைது பரபரப்பு தகவல்கள்
மாலூர் டவுனில் நடந்த பள்ளி மாணவி கொலை வழக்கில் கட்டிட தொழிலாளி கைது செய்யப்பட்டார். விசாரணையில் பரபரப்பு தகவல்கள் வெளியாகின.
கோலார் தங்கவயல்,
மாலூர் டவுனில் நடந்த பள்ளி மாணவி கொலை வழக்கில் கட்டிட தொழிலாளி கைது செய்யப்பட்டார். விசாரணையில் பரபரப்பு தகவல்கள் வெளியாகின.
பள்ளி மாணவி கொலை
கோலார் மாவட்டம் மாலூர் டவுன் இந்திராநகர் பகுதியை சேர்ந்தவள் 15 வயது சிறுமி. இந்த சிறுமி தனியார் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தாள். இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு மாணவி பள்ளி முடிந்ததும் தோழியுடன் வீட்டிற்கு நடந்து வந்து கொண்டு இருந்தாள்.
அந்த மாணவி மாலூர் டவுன் ரெயில் நிலையம் அருகே வந்த போது, மோட்டார் சைக்கிளில் வந்த மர்மநபர் சிறுமியை கையை பிடித்து இழுத்து அருகே உள்ள புதருக்குள் கொண்டு சென்று கற்பழிக்க முயன்றார். இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவி கூச்சலிட்டாள். அப்போது ஆத்திரம் அடைந்த மர்மநபர் மாணவியை கல்லால் தாக்கி விட்டு தப்பி சென்றார். இதில் பலத்த காயம் அடைந்த பள்ளி மாணவி பரிதாபமாக இறந்தாள். இந்த கொலை சம்பவம் மாலூர் டவுனில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
2 தனிப்படைகள் அமைப்பு
இந்த நிலையில் பள்ளி மாணவியை கொலை செய்த மர்மநபர்களை உடனடியாக கைது செய்ய கோரி நேற்று முன்தினம் மாலூர் போலீஸ் நிலையம், தாலுகா அலுவலகம் உள்பட 3 இடங்களில் மாணவர்களும், பல்வேறு அமைப்பினரும் போராட்டம் நடத்தினர். இந்த நிலையில் பள்ளி மாணவி கொலை செய்யப்பட்ட இடத்தில் மத்திய மண்டல போலீஸ் ஐ.ஜி. தயானந்த் பார்வையிட்டு விசாரணை நடத்தினார். மேலும் மாணவியை கொலை செய்த மர்மநபர்களை பிடிக்க கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ராஜு தலைமையில் ஒரு தனிப்படையும், துணை போலீஸ் சூப்பிரண்டு உமேஷ், மாலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் முரளி, சப்-இன்ஸ்பெக்டர் கிரீஷ் ஆகியோர் தலைமையில் ஒரு குழுவும் என 2 தனிப்படை அமைக்கப்பட்டது.
தனிப்படை போலீசார் மாணவியை கொலை செய்த மர்மநபர் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்த நிலையில் மாணவியின் வீட்டின் எதிரே ஒரு கட்டிடம் கட்டும் பணி நடந்து வருகிறது.
கட்டிட தொழிலாளி கைது
அங்கு கட்டிட தொழிலாளியாக வேலை பார்த்து வந்த மாலூர் தாலுகா தேக்கல் பகுதியை சேர்ந்த சுரேஷ்பாபு என்கிற சூரி(வயது 25) மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவரை பிடித்து விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்தனர். இந்த நிலையில் நேற்று காலை தேக்கல் ரெயில் நிலையத்தில் சுரேஷ்பாபு நின்று கொண்டு இருப்பதாக தனிப்படை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு விரைந்து சென்ற போலீசார் சுரேஷ்பாபுவை பிடித்து விசாரித்தனர். அப்போது அவர் முன்னுக்கு பின் முரணாக பேசியதால் அவரை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் பள்ளி மாணவியை கொலை செய்ததை சுரேஷ்பாபு ஒப்புக் கொண்டார். இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.
பரபரப்பு தகவல்கள்
போலீசார் நடத்திய விசாரணையில் பரபரப்பு தகவல்கள் வெளியாகின. இதுகுறித்து போலீசார் தரப்பில் கூறப்பட்டதாவது:-
அதாவது கொலை செய்யப்பட்ட பள்ளி மாணவி, வீட்டின் எதிரே கட்டிடம் கட்டும் பணி நடந்து வருகிறது. அங்கு கட்டிட தொழிலாளியாக வேலை பார்த்த சுரேஷ்பாபுவுக்கு, அந்த மாணவி மீது ஈர்ப்பு ஏற்பட்டு உள்ளது. அந்த மாணவியை எப்படியாவது அடைந்து விட வேண்டும் என்று சுரேஷ்பாபு நினைத்து உள்ளார். மேலும் அதற்குரிய சந்தர்ப்பத்தையும் எதிர்பார்த்து அவர் காத்து இருந்தார்.
இந்த நிலையில் கொலை நடந்த அன்று மாலையில் சீக்கிரமாக வேலையை முடித்த சுரேஷ்பாபு, மோட்டார் சைக்கிளை எடுத்து கொண்டு மாலூர் ரெயில் நிலையம் அருகே சென்று உள்ளார். அப்போது அந்த வழியாக தோழியுடன் நடந்து வந்த பள்ளி மாணவியின் கையை பிடித்து சுரேஷ்பாபு இழுத்து உள்ளார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவியின் தோழி அங்கிருந்து பயந்து ஓடிவிட்டாள். பின்னர் மாணவியை அருகே உள்ள புதருக்குள் இழுத்து சென்று சுரேஷ்பாபு கற்பழிக்க முயற்சி செய்து உள்ளார். ஆனால் அதற்கு மாணவி மறுப்பு தெரிவித்து கூச்சலிட்டதால் மாணவியை கல்லால் தாக்கி சுரேஷ்பாபு கொலை செய்து உள்ளார்.
மனைவியை பிரிந்தவர்
இந்த வழக்கில் போலீசாரின் விசாரணை தீவிரம் அடைந்ததால் தப்பித்து செல்ல நினைத்த சுரேஷ்பாபு, தேக்கலில் இருந்து பெங்களூருவுக்கு ரெயில் மூலம் சென்று அங்கிருந்து வேறு எங்கேயாவது தப்பி செல்ல திட்டமிட்டு இருந்தார். இந்த நிலையில் அவர் எங்களிடம் சிக்கி கொண்டார்.
மேற்கண்டவாறு போலீசார் தெரிவித்தனர்.
கைதான சுரேஷ்பாபுவுக்கு கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்ததும், அவர் தற்போது மனைவியை பிரிந்து வசித்து வருவதும் விசாரணையில் தெரியவந்தது. மேலும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தேக்கல் பகுதியை சேர்ந்த ஒரு சிறுமியை மானபங்கப்படுத்த முயன்றதாக கூறி அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் சுரேஷ்பாபுவுக்கு அடி, உதை கொடுத்து போலீசில் ஒப்படைத்து உள்ளனர். அவர் அந்த வழக்கில் ஜாமீனில் வெளியே வந்ததும் தெரியவந்தது. கைதான சுரேஷ்பாபுவை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
Related Tags :
Next Story