ஏழை விவசாயிகளுக்கு வழங்குவதற்காக 4 ஆயிரத்து 824 ஏக்கர் உபரி நிலம் மீட்பு


ஏழை விவசாயிகளுக்கு வழங்குவதற்காக 4 ஆயிரத்து 824 ஏக்கர் உபரி நிலம் மீட்பு
x
தினத்தந்தி 4 Aug 2018 3:00 AM IST (Updated: 4 Aug 2018 3:10 AM IST)
t-max-icont-min-icon

ஏழை விவசாயிகளுக்கு வழங்குவதற்காக பழனி பகுதியில் உபரியாக இருந்த 4 ஆயிரத்து 824 ஏக்கர் நிலம் மீட்கப்பட்டுள்ளதாக சப்-கலெக்டர் அருண்ராஜ் தெரிவித்தார்.

பழனி,



பழனி பகுதிகளில் உபரி நிலம் மீட்கப்பட்டுள்ளது குறித்து சப்-கலெக்டர் அருண்ராஜ் நிருபர்களிடம் கூறியதாவது:-

பழனியை அடுத்த நெய்க்காரப்பட்டியை சேர்ந்தவர் நரேந்திரா. இவர் கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு ஜமீன்தாராக இருந்துள்ளார். இவர் வசம் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கர் நிலம் இருந்துள்ளது. இதில் அவருடைய பயன்பாட்டுக்கு 500 ஏக்கருக்கு மேல் நிலம் ஒதுக்கீடு செய்யவும், உபரிநிலங்களை மீட்டு ஏழை விவசாயிகளுக்கு வழங்கவும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு நிலசீர்திருத்த துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.

ஆனால் தனக்கு வழங்கப்பட வேண்டிய நிலங்களை வழங்கிய பின்னரே உபரி நிலங்களை அதிகாரிகள் கையகப்படுத்த வேண்டும் என கோரி மதுரை ஐகோர்ட்டு கிளையில் நரேந்திரா மனு தாக்கல் செய்தார். மனுவை விசாரித்த கோர்ட்டு உபரி நிலங்களை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் கையகப்படுத்த இடைக்கால தடை விதித்தது. இதனால் ஏழை விவசாயிகளுக்கு நிலம் வழங்க முடியாத நிலை ஏற்பட்டது.

இதையடுத்து அந்த வழக்கை முடித்து வைக்க தனி அதிகாரி ஒருவர் நியமிக்கப்பட்டார். அதையடுத்து இந்த வழக்கு கடந்த ஜூலை மாதம் முடிவுக்கு வந்தது. நில உரிமையாளருக்கு சேர வேண்டிய நிலத்தை வழங்கிவிட்டு உபரி நிலங்களை மீட்க கோர்ட்டு அனுமதி அளித்து உத்தரவும் பிறப்பித்தது. அதையடுத்து நரேந்திராவுக்கு சேர வேண்டிய நிலம் போக உபரியாக உள்ள 4 ஆயிரத்து 824 ஏக்கர் நிலம் தற்போது மீட்கப்பட்டுள்ளது.

பெரியம்மாபட்டி, சித்தரேவு, இரவிமங்கலம், தெற்கு தாத நாயக்கன்பட்டி உள்ளிட்ட கிராமங்களில் இருந்து இந்த நிலம் மீட்கப்பட்டுள்ளது. இதில் முதற்கட்டமாக பெரியம்மாபட்டியில் மீட்கப்பட்ட 1,160 ஏக்கர் நிலத்தை ஏழை விவசாயிகளுக்கு வழங்க தற்போது முடிவு செய்யப்பட்டுள்ளது.

பெரியம்மாபட்டி கிராமத்தில் 5 கிலோ மீட்டர் சுற்றுவட்டாரத்தில் வசிக்கும் விவசாயிகள் இந்த நிலத்தை பெற தகுதி உடையவர்கள் ஆவார்கள். அதே போல் முன்னாள் ராணுவ வீரர்கள், பர்மா, இலங்கையில் இருந்து தாயகம் திரும்பிய விவசாயிகளும் இந்த நிலத்தை பெற முடியும். நஞ்சை நிலமாக இருந்தால் 1½ ஏக்கரும், புஞ்சை நிலமாக இருந்தால் 3 ஏக்கரும் விவசாயிகளுக்கு வழங்கப்படும். முதல் 20 ஆண்டுகளுக்கு நிலத்தில் உழவு பணி மேற்கொள்ளும் உரிமை மட்டும் விவசாயிகளுக்கு வழங்கப்படும். அதன் பின்னர் அவர்களின் பெயருக்கு நிலம் மாற்றிக்கொடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story