திருவொற்றியூரில் மெட்ரோ ரெயில் பணியால் குண்டும், குழியுமான சாலைகளை சீரமைக்க கோரிக்கை பொதுமக்கள் மறியல் போராட்டம்


திருவொற்றியூரில் மெட்ரோ ரெயில் பணியால் குண்டும், குழியுமான சாலைகளை சீரமைக்க கோரிக்கை பொதுமக்கள் மறியல் போராட்டம்
x
தினத்தந்தி 4 Aug 2018 5:30 AM IST (Updated: 4 Aug 2018 3:14 AM IST)
t-max-icont-min-icon

திருவொற்றியூரில் நடைபெற்று வரும் மெட்ரோ ரெயில் பணியால் குண்டும், குழியுமான சாலைகளை சீரமைக்க கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

திருவொற்றியூர், 

திருவொற்றியூர் டோல்கேட் முதல் விம்கோ நகர் வரை மெட்ரோ ரெயில் பணிகள் நடைபெற்று வருகின்றது. தற்போது திருவொற்றியூர் எல்லையம்மன் கோவில் பகுதியில் இருந்து திருவொற்றியூர் விம்கோ நகர் வரை நெடுஞ்சாலையின் நடுவில் மெட்ரோ ரெயில் செல்லும் உயர்த்தப்பட்ட பாதைக்கான தூண்கள் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றது.

மெட்ரோ ரெயில் பணிகள் நடைபெறும் திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் ஏராளமான கடைகள், ஓட்டல்கள் மற்றும் மருத்துவமனைகள் உள்ளன. மெட்ரோ ரெயில் பணியால் சாலையின் இரு புறமும் பல இடங்களில் பள்ளங்கள் ஏற்பட்டு உள்ளது.

இதனால் அந்த பகுதியில் வாகனங்கள், குண்டும் குழியுமான சாலையில் ஊர்ந்தபடி செல்வதால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதுடன், சாலையில் மண் தூசுகள் கிளம்பி அந்த பகுதியில் இருக்கும் கடைகளில் உள்ள பொருட்கள் மீது விழுந்து அவை கெட்டுப்போகின்றது. இதனால் வியாபாரிகள் பெரும் சிரமத்துக்கு உள்ளாகின்றனர்.

வியாபாரிகள் கோரிக்கை

இதனால் நெரிசல் மிகுந்த காலை, மாலை நேரங்களில் இந்த வழியாக பொதுமக்கள் நடந்து செல்லமுடியவில்லை. வாகனங்களில் செல்வோரும், நடந்து செல்லும் பொதுமக்களும் துணியால் தங்கள் வாய், மூக்கை மறைத்துக்கொண்டு செல்லவேண்டிய நிலை உள்ளது.

எனவே வியாபாரிகள், பொதுமக்கள் பாதிக்காத வகையில் மெட்ரோ ரெயில் பணிகளை மேற்கொள்ளவேண்டும் எனவும், மெட்ரோ ரெயில் பணி நடைபெறும் சாலையின் இருபுறமும் குண்டும் குழியுமாக உள்ள சாலைகளை சீரமைத்து தார்சாலைகள் அமைக்க வேண்டும் என திருவொற்றியூர் வியாபாரிகள் சங்கம் சார்பில் சென்னை மெட்ரோ ரெயில் மேலாண்மை இயக்குனருக்கு கோரிக்கை விடுத்து உள்ளனர்.

கழிவுநீர் கால்வாய் மூடிகள் சேதம்

இந்த நிலையில் எல்லையம்மன் கோவில் அருகே மெட்ரோ ரெயில் பணிகள் நடைபெறுவதால் சாலை ஓரம் உள்ள கழிவுநீர் கால்வாய் மூடிகள் உடைந்து பள்ளம் ஏற்பட்டுள்ளது. அதன் மீது இரும்பு தடுப்பு வைத்து உள்ளனர்.

இதனால் எண்ணூர் விரைவு சாலையில் இருந்து திருவொற்றியூர் நெடுஞ்சாலைக்கு வாகனங்களில் வருபவர்களும், அருகிலுள்ள பள்ளிக்கு செல்லும் மாணவ-மாணவிகளும், மருத்துவமனைக்கு செல்பவர்களும் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். அதே இடத்தில் பல விபத்துகளும் ஏற்பட்டுள்ளது. வாலிபர் ஒருவரும் இதே இடத்தில் டிப்பர் லாரிக்கு இடையில் சிக்கி பலியானது குறிப்பிடத்தக்கது.

சாலை மறியல்

எனவே குண்டும் குழியுமான சாலைகள் மற்றும் சேதமடைந்த கழிவுநீர் கால்வாய் மூடிகளை சீரமைத்து விபத்துகளை தடுக்க வேண்டும் என வலியுறுத்தி அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் சிலர் திருவொற்றியூர் எல்லையம்மன் கோவில் அருகே சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுபற்றி தகவல் அறிந்து வந்த திருவொற்றியூர் போலீசார், இதுபற்றி உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறி மறியலில் ஈடுபட்டவர்களை சமரசம் செய்து கலைந்து போகச் செய்தனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 

Next Story