பட்டப்பகலில் துணிகரம்: பேராசிரியர் வீட்டில் 8 பவுன் நகைகள் திருட்டு
நிலக்கோட்டையில் பட்டப்பகலில் பேராசிரியர் வீட்டில் 8 பவுன் நகைகளை திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
நிலக்கோட்டை,
இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
நிலக்கோட்டை இ.பி. காலனியை சேர்ந்தவர் ராஜ்குமார் (வயது 38). இவர், தேனி மாவட்டம் பெரியகுளத்தில் உள்ள தனியார் கல்லூரியில் பேராசிரியராக பணிபுரிந்து வருகிறார். அவருடைய மனைவி ராதிகாதேவி (35). இவர், நிலக்கோட்டையில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியையாக உள்ளார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் வீட்டை பூட்டிவிட்டு ராஜ்குமாரும், ராதிகாதேவியும் வேலைக்கு சென்று விட்டனர். இதை நோட்டமிட்ட மர்ம நபர்கள் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்தனர். பின்னர் பீரோவில் இருந்த தங்க நகைகள் மற்றும் பொருட்களை திருடிவிட்டு தப்பி சென்றனர்.
வேலை முடிந்து மாலையில் ராஜ்குமாரும், அவருடைய மனைவியும் வீட்டுக்கு வந்தனர். அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். வீட்டுக்குள் சென்று பார்த்தபோது துணிகள் சிதறி கிடந்தன. மேலும் பீரோவில் இருந்த 8 பவுன் நகைகள் மற்றும் வெள்ளி பொருட்கள் திருட்டு போயிருப்பது தெரியவந்தது.
இதுகுறித்து நிலக்கோட்டை போலீஸ் நிலையத்தில் ராதிகாதேவி புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஆனந்தி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும் கைவிரல்ரேகை நிபுணர்களும் வரவழைக்கப்பட்டனர். அவர்கள், வீட்டில் பதிவாகி இருந்த ரேகைகளை சேகரித்தனர்.
மேலும் திண்டுக்கல்லில் இருந்து மோப்பநாய் ‘லிண்டா’ வரவழைக்கப்பட்டது. அது மோப்பம் பிடித்தபடி வீட்டை 3 முறை சுற்றி வந்தது. பின்னர் வத்தலக்குண்டு-நிலக்கோட்டை மெயின்ரோடு வரை ஓடி சென்று திரும்பியது. ஆனால் யாரையும் கவ்வி பிடிக்கவில்லை. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
பட்டப்பகலில் பேராசிரியர் வீட்டின் பூட்டை உடைத்து நகை, வெள்ளிப்பொருட்களை திருடி சென்ற சம்பவம் அப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Related Tags :
Next Story