ஆசிரியர் கண்டித்ததால் 2 மாணவிகள் தற்கொலை முயற்சி
கொடைரோடு அருகே ஆசிரியர் கண்டித்ததால் 2 மாணவிகள் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கொடைரோடு,
கொடைரோடு அருகேயுள்ள கொழிஞ்சிப்பட்டியில் அரசு உயர்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் சுற்று வட்டார பகுதியை சேர்ந்த 150-க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் 10-ம் வகுப்பு படிக் கும் மாணவர்களுக்கு மாதாந்திர தேர்வு நடந்துள்ளது.
இந்த தேர்வில் கொழிஞ்சிப்பட்டி பகுதியை சேர்ந்த 2 மாணவிகள், குறைவான மதிப்பெண்கள் எடுத்ததாக தெரிகிறது. இதனால் அந்த 2 மாணவிகளையும் ஆசிரியர் ஒருவர் கண்டித்து உள்ளார். மேலும் அவர்களை ஆசிரியர் கையால் கன்னத்தில் அறைந்ததாகவும் தெரிகிறது. சக மாணவர்கள் முன்னிலையில் அவமானப்படுத்தியதால் மனமுடைந்த 2 மாணவிகளும் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தனர்.
இதையடுத்து பள்ளிக்கூடம் முடிந்த பிறகு, சாலையோரத்தில் நின்ற அரளிச்செடிகளில் இருந்த காய்களை (விஷத்தன்மை கொண்டது) பறித்து சிறிதளவு சாப்பிட்டுள்ளனர். இதையடுத்து 2 பேரும், வீட்டுக்கு செல்லாமல் மெட்டூர் அருகே நடந்து சென்று கொண்டிருந்தனர். மாணவிகளை பார்த்த அப்பகுதி மக்கள் அவர்களை அழைத்து விசாரணை நடத்தினர்.
அதன்பிறகு பொதுமக்கள், அந்த மாணவிகளின் பெற்றோருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் மாணவிகளின் பெற்றோர் அங்கு சென்றனர். மேலும் ஆசிரியர் கண்டித்ததால் அரளி விதைகளை சாப்பிட்டதாக தெரிவித்துள்ளனர்.
இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் உடனடியாக அவர்களை மீட்டு கொடைரோடு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு மாணவிகள் 2 பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து பள்ளி தலைமை ஆசிரியர் சுப்பிரமணியனிடம் கேட்டபோது, ‘இதுபோன்ற சம்பவம் என் அனுபவத்தில் நடந்தது இல்லை. ஆசிரியர் கண்டித்ததால் மாணவிகள் துரதிர்ஷ்டவசமாக இந்த செயலில் ஈடுபட்டுள்ளனர். மாணவிகளை நேரில் பார்த்து நலம் விசாரித்தேன். இருவரும் நலமாக உள்ளனர். இதுதொடர்பாக பெற்றோர்களிடமும் பேசினேன். மேலும் மாவட்ட அதிகாரிகளுக்கும் தகவல் கொடுத்துள்ளேன்’ என்றார்.
ஆசிரியர் கண்டித்ததால் பள்ளி மாணவிகள் 2 பேர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் கொடைரோடு பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story