கடமலை-மயிலை ஒன்றியத்துக்கு ரூ.12 கோடியில் புதிய கூட்டுக்குடிநீர் திட்டம் ஓ.பன்னீர்செல்வம் தகவல்


கடமலை-மயிலை ஒன்றியத்துக்கு ரூ.12 கோடியில் புதிய கூட்டுக்குடிநீர் திட்டம் ஓ.பன்னீர்செல்வம் தகவல்
x
தினத்தந்தி 4 Aug 2018 3:45 AM IST (Updated: 4 Aug 2018 3:45 AM IST)
t-max-icont-min-icon

கடமலை-மயிலை ஒன்றியத்தில் குடிநீர் தட்டுப்பாட்டை போக்குவதற்கு ரூ.12 கோடி மதிப்பில் புதிய கூட்டுக்குடிநீர் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளதாக துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

தேனி,



தேனி அருகே அரண்மனைப்புதூரில் துணை முதல்- அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பொதுமக்களை சந்தித்து குறைகேட்பு கூட்டம் நேற்று நடத்தினார். கூட்டத்தில் பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை வாங்கினார். இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டு பல்வேறு குறைகள், கோரிக்கைகள் தொடர்பாக மனுக்கள் அளித்தனர்.

கூட்டத்தை தொடர்ந்து ஓ.பன்னீர்செல்வம் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

மாவட்டம் முழுவதும் மக்களை சந்தித்து குறைகள் கேட்கும் கூட்டம் நடத்தப்பட உள்ளது. முதற்கட்டமாக 130 கிராம ஊராட்சி பகுதிகளிலும் சென்று குறைகள் கேட்க உள்ளேன். அதன்பிறகு பேரூராட்சி பகுதிகளிலும், நகராட்சி பகுதிகளிலும் மக்களை சந்தித்து குறைகேட்பு கூட்டம் நடத்தப்படும். ஒவ்வொரு வாரமும் வியாழக்கிழமை முதல் ஞாயிற்றுக்கிழமை வரை மக்களை சந்திக்க உள்ளேன். இதில், பொதுமக்கள் தங்கள் பகுதியில் உள்ள குடிநீர் வசதி, சாலை வசதி, கழிப்பிட வசதி, மின்சார வசதி உள்ளிட்டவை தொடர்பான தேவைகள், குறைகளை தெரிவிக்கலாம்.

கடமலை-மயிலை ஒன்றிய பகுதிகளில் ஏற்பட்டுள்ள குடிநீர் தட்டுப்பாட்டை போக்கும் வகையில் ரூ.12 கோடி மதிப்பில் புதிய கூட்டுக்குடிநீர் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. பி.டி.ஆர்.-தந்தை பெரியார் வாய்க்காலில் கூடுதல் தண்ணீர் திறப்பதற்காக அரசாணையை மாற்ற வேண்டும் என்ற விவசாயிகளின் கோரிக்கை பரிசீலனையில் உள்ளது.

கொட்டக்குடி ஆற்றங்கரையோர பகுதிகள், தேனியில் இருந்து போடி வரை ரெயில்வே சாலையோரம் ஆக்கிரமிப்பு செய்து வசிக்கும் மக்களுக்கு குடிசை மாற்று வாரியத்தின் கீழ் வீடுகள் கட்டிக் கொடுக்கும் திட்டத்துக்கு நிர்வாக அனுமதி பெறப்பட்டு உள்ளது. இதற்காக 7 இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. வீரபாண்டியில் ஆக்கிரமிப்பு செய்து வசித்து வந்த மக்களுக்கும் இதில் வீடு வழங்கப்பட உள்ளது. இந்த பணிகள் இந்த ஆண்டே தொடங்கும்.

நிலத்தடி நீர்மட்டத்தை மேம்படுத்தவும், நீர்நிலைகளை தூர்வாரவும் மாவட்ட கலெக்டர் பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறார். அவருக்கு தேவையான உதவிகளை அரசும் செய்து கொடுக்கும். போடி-மதுரை அகல ரெயில்பாதை திட்டப் பணிக்கு மத்திய அரசு நிதி ஒதுக்கீடு செய்து பணிகள் நடந்து வருகின்றன. ஆண்டிப்பட்டியில் இருந்து போடி வரை பாதை அமைக்க ஜல்லிக்கற்கள் வழங்குவதற்கான ஒப்பந்தப்புள்ளி வழங்கப்பட்டு விட்டது. திண்டுக்கல்-லோயர்கேம்ப் அகல ரெயில்பாதை திட்டப் பணியை பொறுத்தவரை போடியில் இருந்து குமுளி வரை ஏற்கனவே நிலம் அளவீடு பணிகள் நடந்துள்ளன.

இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன், பெரியகுளம் ஆர்.டி.ஓ. ஜெயப்ரிதா, ஊராட்சிகள் உதவி இயக்குனர் அபிதாஹனீப், அ.தி.மு.க. மாவட்ட செயலாளர் சையதுகான், ஜெயலலிதா பேரவை மாவட்ட செயலாளர் ஓ.ப.ரவீந்திரநாத்குமார் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

Next Story