கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு தண்ணீர் திறந்து விட முடியாது ஆந்திர அதிகாரிகள் தகவல்
கிருஷ்ணா நதி நீர் பங்கீட்டு திட்டத்தின் கீழ் பூண்டி ஏரிக்கு தண்ணீர் திறந்து விட முடியாது என்று ஆந்திர அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஊத்துக்கோட்டை,
சென்னைக்கு குடிநீர் வழங்கும் பிரதான ஏரிகளில் ஒன்று பூண்டி . இந்த ஏரியில் மழை நீர் மற்றும் கிருஷ்ணா நதி நீர் பங்கீட்டு திட்டத்தின் கீழ் ஆந்திர மாநிலம் நெல்லூர் அருகே உள்ள கண்டலேறு அணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீரை சேமித்து வைத்து தேவைப்படும் போது புழல் மற்றும் செம்பரம்பாக்கம் ஏரிகளுக்கு திறந்து விடப்படுவது வழக்கம். கிருஷ்ணா நதி நீர் பங்கீட்டு திட்டத்தின் படி ஆந்திர அரசு தமிழகத்துக்கு ஆண்டு தோறும் 12 டி.எம்.சி. தண்ணீர் வழங்க வேண்டும். ஜனவரி மாதம் முதல் ஏப்ரல் மாதம் வரை 4 டி.எம்.சி. தண்ணீர், ஜூலை மாதம் முதல் அக்டோபர் மாதம் வரை 8 டி.எம்.சி. தண்ணீரை கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு திறந்துவிட வேண்டும்.
அதன்படி கடந்த டிசம்பர் மாதம் 27-ந் தேதி கண்டலேறு அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டது. இந்த தண்ணீீர் ஜனவரி மாதம் 2- ந் தேதி பூண்டி ஏரியை வந்தடைந்தது. அதிகபட்சமாக 2,450 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டது.
கடிதம் எழுதினர்
இந்த தண்ணீர் பூண்டி ஏரிக்கு அதிகபட்சமாக 610 கனஅடி வீதம் வந்து சேர்ந்தது. கண்டலேறு அணையில் தண்ணீீர் மட்டம் வெகுவாக குறைந்ததால் பூண்டி ஏரிக்கு மார்ச் மாதம் 26-ந்தேதி தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டது. இந்த இடைபட்ட காலத்தில் 2,280 டி.எம்.சி. தண்ணீீர் பூண்டி ஏரிக்கு கிடைத்தது. கண்டலேறு அணையில் இருந்து தண்ணீர் வரத்து நின்று விட்டதால் பூண்டி ஏரியின் நீர் மட்டம் வெகுவாக குறைந்தது.
இதன் காரணமாக புழல் மற்றும் செம்பரம்பாக்கம் ஏரிகளுக்கு லிங்க் கால்வாயில் திறந்து விடப்பட்ட தண்ணீர் மே மாதம் 21-ந் தேதி நிறுத்தப்பட்டது. இந்த நிலையில் கிருஷ்ணா நதி நீர் பங்கீட்டு திட்டத்தின்படி 2-ம் தவணையாக ஜூலை மாதம் முதல் தண்ணீர் திறந்து விடும்படி தமிழக பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஆந்திர பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு கடந்த ஜூன் மாதம் கடிதம் எழுதினர்.
பருவ மழை பெய்தால் கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு தண்ணீர் திறந்து விட ஆந்திர அதிகாரிகள் எண்ணி இருந்தனர். ஆனால் பருவ மழை பொய்த்து போனதால் அது சாத்தியபடவில்லை. கண்டலேறு அணையின் மொத்த கொள்ளளவு 68 டி.எம்.சி. ஆகும்.
தண்ணீர் திறந்து விட முடியாது
ஆனால் தற்போது வெறும் 4.50 டி.எம்.சி. தண்ணீர்தான் இருப்பு உள்ளது. இதன் காரணமாக கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு தற்போது தண்ணீர் திறந்துவிட முடியாது என்று ஆந்திர பொதுப்பணித்துறை அதிகாரிகள் தமிழக அதிகாரிகளிடம் போனில் தெரிவித்து விட்டதாக கூறப்படுகிறது. பூண்டி ஏரி தற்போது குட்டை போல் காட்சியளிக்கிறது. பூண்டி ஏரியில் 3,231 மில்லியன் கனஅடி தண்ணீரை சேமித்து வைக்கலாம்.
நேற்று காலை 6 மணி நிலவரப்படி ஏரியில் வெறும் 48 மில்லியன் கனஅடி தண்ணீர் மட்டும்தான் இருப்பு உள்ளது. பூண்டி ஏரியில் இருந்து சென்னை குடிநீர் வாரியத்துக்கு பேபி கால்வாயில் வினாடிக்கு 22 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்படுகிறது.
Related Tags :
Next Story