பட்டா மாற்றம் செய்ய லஞ்சம் வாங்கிய நில அளவையர் கைது
பட்டா மாற்றம் செய்ய ரூ.10 ஆயிரம் லஞ்சம் கேட்ட காஞ்சீபுரம் நகராட்சி சர்வேயரை லஞ்ச ஒழிப்பு போலீசார் நேற்று கைது செய்தனர்.
காஞ்சீபுரம்,
காஞ்சீபுரம் நாகலூத்து மேட்டில் வசிப்பவர் அசோக், கூலித்தொழிலாளி. இவர் தனது நிலத்தை தனது பெயருக்கு பட்டா மாற்றம் செய்வதற்காக, கடந்த ஆண்டு (2017) டிசம்பர் மாதம், காஞ்சீபுரம் நகராட்சி அலுவலகத்தில் மனு கொடுத்தார். அப்போது நில அளவையர் சங்கர் (45), நிலத்தை அளந்து பட்டா தர வேண்டும் என்றால் ரூ.10 ஆயிரம் லஞ்சம் தர வேண்டும் என கூறியதாக தெரிகிறது.
ஆனால் அசோக், தான் ஏழ்மையால் வாடுவதாகவும், அதனால் அந்த பணத்தை தர முடியாது எனவும் கூறினார். அதற்கு சங்கர் ‘எனக்கு அதெல்லாம் தெரியாது, பணம் கொடுத்தால் தான் கோப்பு நகரும்’ என கூறியுள்ளார். இதனால் பலமுறை காஞ்சீபுரம் நகராட்சி அலுவலகத்துக்கு அலைந்து பார்த்தும் அவரால் பட்டா பெயர் மாற்றம் செய்ய முடியவில்லை. பின்னர் அசோக் இதுபற்றி, காஞ்சீபுரம் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார்.
கைது
இதையடுத்து லஞ்ச ஒழிப்பு போலீசார் ஆலோசனையின் பேரில், இடத்தை அளக்க வாருங்கள் பணம் தருகிறேன் என சங்கரிடம் அசோக் கூறினார். இதை நம்பிய சங்கர் நாகலூத்துமேடு பகுதியில் உள்ள அசோக்கின் இடத்தை அளக்க வந்தார்.
அப்போது அங்கு காஞ்சீபுரம் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீஸ் சூப்பிரண்டு சிவபாதசேகரன் தலைமையிலான லஞ்ச ஒழிப்பு போலீசார் மறைந்து இருந்தனர். நிலத்தை அளந்து முடிந்ததும், சங்கர், அசோக்கிடம் இப்போதைக்கு ரூ.2 ஆயிரம் கொடு, மீதி பணத்தை பிறகு வாங்கி கொள்கிறேன் என கூறினார். அதன்படி அசோக் ரூ.2 ஆயிரத்தை சங்கரிடம் கொடுத்தார்.
அப்போது, அங்கு தயாராக இருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் சங்கரை கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர். அவரிடம் இருந்த லஞ்ச பணம் ரூ.2 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.
Related Tags :
Next Story