மேல்பாடி அருகே 108 ஆம்புலன்சில் பெண்ணுக்கு சுகப்பிரசவம் அழகான ஆண் குழந்தை பிறந்தது


மேல்பாடி அருகே 108 ஆம்புலன்சில் பெண்ணுக்கு சுகப்பிரசவம் அழகான ஆண் குழந்தை பிறந்தது
x
தினத்தந்தி 4 Aug 2018 4:10 AM IST (Updated: 4 Aug 2018 4:10 AM IST)
t-max-icont-min-icon

மேல்பாடி அருகே 108 ஆம்புலன்சில் பெண்ணுக்கு சுகப்பிரசவம் நடந்தது. இதில் அழகான ஆண் குழந்தை பிறந்தது.

சிப்காட்( ராணிப்பேட்டை),

திருவலம் அருகே வெப்பாலை கிராமத்தை சேர்ந்தவர் ராஜன், எலக்ட்ரீசியன். இவரது மனைவி பிரிசில்லா (வயது 30), இவர்களுக்கு ஏற்கனவே 2 குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் 3-வது முறையாக பிரிசில்லா கர்ப்பமடைந்தார். நிறைமாத கர்ப்பிணியாக இருந்த பிரிசில்லாவுக்கு நேற்று முன்தினம் இரவு 11 மணியளவில் பிரசவ வலி ஏற்பட்டது.

இதைத்தொடர்ந்து அவரது கணவர் உள்பட உறவினர்கள் உடனடியாக அருகில் உள்ள மேல்பாடி துணை ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அழைத்து சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் உடலில் நீர்சத்து குறைவாக இருப்பதால் உடனடியாக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும்படி அறிவுறுத்தினர்.

அதன்பேரில் 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சிறிது நேரத்தில் 108 ஆம்புலன்ஸ் அங்கு வந்து சேர்ந்தது. பின்னர் ஆம்புலன்சில் பிரிசில்லாவை ஏற்றிக்கொண்டு வள்ளிமலை, சேர்க்காடு வழியாக வேலூர் நோக்கி ஆம்புலன்ஸ் சென்றது.

ஆண் குழந்தை

ஆம்புலன்ஸ் புறப்பட்ட சிறிதுநேரத்தில் பிரிசில்லாவுக்கு பிரசவ வலி அதிகரித்தது. இதனால் டிரைவர் ராஜேஷ்குமார் உடனடியாக ஆம்புலன்சை நிறுத்தினார். மருத்துவ உதவியாளர் சுகன்யா பிரசவத்திற்கான ஏற்பாடுகளை செய்தார். சிறிது நேரத்தில் பிரிசில்லாவுக்கு 108 ஆம்புலன்சிலேயே சுகப்பிரசவம் நடந்தது. இதில் அவருக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது.

பின்னர் தாயும், குழந்தையையும் தொடர் சிகிச்சைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு இருவரும் நலமுடன் உள்ளதாக உறவினர்கள் தெரிவித்தனர். 

Next Story