குழித்துறை அருகே சாலையை சீரமைக்கக்கோரி காங்கிரசார் மறியல்


குழித்துறை அருகே சாலையை சீரமைக்கக்கோரி காங்கிரசார் மறியல்
x
தினத்தந்தி 4 Aug 2018 4:38 AM IST (Updated: 4 Aug 2018 4:38 AM IST)
t-max-icont-min-icon

குழித்துறை அருகே சேதமடைந்த சாலையை சீரமைக்க கோரி காங்கிரசார் மறியலில் ஈடுபட்டனர்.

களியக்காவிளை,



குழித்துறை அருகே கழுவன்திட்டையில் இருந்து தெற்றிகுழிக்கு ஒரு சாலை செல்கிறது. இந்த சாலை வழியாக தினமும் ஏராளமான அரசு பஸ் மற்றும் தனியார் வாகனங்கள் செல்கின்றன. அவற்றில், பள்ளி கல்லூரிக்கு செல்லும் மாணவ-மாணவிகள், அலுவலகங்களுக்கு செல்லும் ஊழியர்கள், தொழிலாளர்கள் என பலதரப்பினர் பயணம் செய்கிறார்கள்.

இந்த சாலையில் பரக்குன்று முதல் தெற்றிகுழி வரை சாலை மிகவும் சேதமடைந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால், அடிக்கடி விபத்துகள் நடந்து வருகிறது. குறிப்பாக மழை காலங்களில் சாலையில் உள்ள பள்ளங்களில் தண்ணீர் தேங்கி நிற்பதால் இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் தடுமாறி விழுந்து காயமடைகிறார்கள். இந்த சாலையை சீரமைக்க வேண்டும் என அந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர். ஆனால், இதுவரை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இந்தநிலையில், சேதமடைந்த சாலையை சீரமைக்க வலியுறுத்தி, காங்கிரஸ் கட்சி சார்பில் நேற்று பரக்குன்று சந்திப்பில் சாலை மறியல் போராட்டம் நடந்தது. போராட்டத்துக்கு மேல்புறம் வட்டார (மேற்கு) தலைவர் மோகனதாஸ் தலைமை தாங்கினார். எம்.எல்.ஏ.க்கள் பிரின்ஸ், ராஜேஷ்குமார், வட்டார காங்கிரஸ் துணைத்தலைவர் கமலானந்தகுமார், மாவட்ட சேவாதள தலைவர் ஜோசப் தயாசிங், மாவட்ட செயலாளர் ஸ்டுவர்டு, துணைத்தலைவர் ரவிசங்கர் உள்பட பலர் முன்னிலை வகித்தனர்.

போராட்டத்தில் மாநில குழு உறுப்பினர் எட்வர்ட், மாவட்ட பஞ்சாயத்து முன்னாள் கவுன்சிலர் சாலின் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

போராட்டத்தின் போது சாலையை சீரமைக்க கோரி கோஷமிடப்பட்டது. தகவல் அறிந்த களியக்காவிளை போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று போராட்டக்காரர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து காங்கிரசார் போராட்டத்தை கைவிட்டனர்.

இந்த போராட்டத்தால், அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Next Story