தியாகிகள் நினைவு சின்னத்தை மாற்று இடத்தில் நிறுவ கோரிக்கை


தியாகிகள் நினைவு சின்னத்தை மாற்று இடத்தில் நிறுவ கோரிக்கை
x
தினத்தந்தி 4 Aug 2018 4:55 AM IST (Updated: 4 Aug 2018 4:55 AM IST)
t-max-icont-min-icon

மார்த்தாண்டம் காந்தி மைதானத்தில் நடைபெறும் இணைப்பு மேம்பால பணியால் அகற்றப்படும் தியாகிகள் நினைவு சின்னத்தை மாற்று இடத்தில் நிறுவ வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

குழித்துறை,



மார்த்தாண்டம் தேசிய நெடுஞ்சாலையில் பம்மம் முதல் வெட்டுமணி வரை 2½ கி.மீ. நீளத்துக்கு மேம்பாலம் அமைக்கப்பட்டு வருகிறது. தூண்கள் அமைப்பது, மார்த்தாண்டம் சந்திப்பு பகுதியில் ரவுண்டானா மேம்பாலம் அமைத்தல், மேம்பாலத்தில் இரும்பு உத்திரங்களை பொருத்துதல், சாலை போக்குவரத்துக்கான இரும்பு தளங்கள் பொருத்துதல், மேம்பால சாலையில் காங்கிரீட் தளம் அமைத்தல் என பல பிரிவுகளாக மேம்பால பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.

இந்த நிலையில் மார்த்தாண்டம் சந்திப்பில் இருந்து பஸ் நிலையம் செல்லும் மார்க்கெட் சாலையில் 100 மீட்டர் நீள இணைப்பு மேம்பாலம் அமைக்கும் பணிகளும் நடந்து வருகிறது. இந்த இணைப்பு பாலம் நடைபெறுவதால் மகாத்மா காந்தியடிகள் பேசிய காந்தி மைதானம் முற்றிலும் அழிகிறது. இந்த காந்தி மைதானம் போராட்டம் நடைபெறும் இடமாக இருந்த பகுதியாகும். மேலும் அங்கு நிறுத்தப்பட்டிருந்த வேன்களும் அப்புறப்படுத்தப்பட்டுள்ளன.

காந்தி மைதானம், குமரி மாவட்டம் திருவிதாங்கூர் அரசிடமிருந்து தமிழ்நாட்டுடன் இணைப்பதற்கு நடத்தப்பட்ட போராட்ட களமாக இருந்தது. அப்போது திருவிதாங்கூர் அரசு துப்பாக்கி சூடு நடத்தியதில் சில உயிர் இழப்பும் ஏற்பட்டது. அதனை நினைவுபடுத்தும் வகையில் காந்தி மைதானத்தில் தியாகிகள் நினைவு சின்னம் நிறுவப்பட்டுள்ளது.

இந்த இணைப்பு மேம்பால பணி முடிவடைந்ததும், பஸ் நிலையத்துக்கு இணைப்பு சாலை அமைக்கும் போது அந்த தியாகிகள் நினைவு சின்னமும் அகற்றப்பட உள்ளது.

அகற்றப்படும் தியாகிகள் நினைவு சின்னத்தை மாற்று இடத்தில் நிறுவ வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் இதுகுறித்து குழித்துறை நகராட்சியின் அந்த பகுதி முன்னாள் கவுன்சிலர் பொன் சகாதேவன் கூறுகையில், இணைப்பு மேம்பால பணியால் தியாகிகள் நினைவு சின்னம் அகற்றப்பட உள்ளது. இதனை நகராட்சிக்கு சொந்தமான பூங்காவில் நிறுவ நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

Next Story