செய்யாறு வேதபுரீஸ்வரர் கோவிலில் ரூ.36 லட்சத்தில் கட்டப்பட்ட அன்னதான கூடம் 10-ந் தேதி திறக்கப்படும் அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் தகவல்
செய்யாறு வேதபுரீஸ்வரர் கோவிலில் ரூ.36 லட்சத்தில் கட்டப்பட்ட அன்னதான கூடம் 10-ந் தேதி திறக்கப்படுகிறது.
செய்யாறு,
செய்யாறு டவுன் திருவோத்தூரில் பாலகுஜாம்பிகை சமேத வேதபுரீஸ்வரர் கோவிலில் தமிழக அரசின் அன்னதான திட்டத்தின் கீழ் நாள்தோறும் 50 பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் அன்னதான கூடம் அமைக்க தமிழக அரசு ரூ.36 லட்சம் ஒதுக்கீடு செய்து கட்டுமான பணிகள் முடிந்து பல மாதங்களாக திறக்கப்படாமல் இருந்து வருகிறது.
இதனை அறிந்த தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன், தூசி கே.மோகன் எம்.எல்.ஏ. ஆகியோர் நேற்று கோவிலுக்கு சென்று புதிதாக கட்டப்பட்டுள்ள அன்னதான கூடத்தினை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். ஆய்வில் அன்னதான கூடத்தை சுற்றியுள்ள இடத்தினை தூய்மைப்படுத்த வேண்டும் என்று கோவில் நிர்வாக அலுவலர் உமேஷ்குமாரிடம் அமைச்சர் ஆலோசனை வழங்கினார்.
அதைத்தொடர்ந்து நிருபர்களிடம் அமைச்சர் கூறுகையில், வருகிற 10-ந்தேதி கோவில் அன்னதான கூடம் திறந்து வைத்து பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என்றார்.
முன்னதாக ஆடி மாத வெள்ளிக்கிழமையை முன்னிட்டு ஆதிபராசக்தி கோவிலில் கோ பூஜை, அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடந்தது. இதில் சிறப்பு விருந்தினராக அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன், தூசி கே.மோகன் எம்.எல்.ஏ., முன்னாள் அமைச்சர் முக்கூர் என்.சுப்பிரமணியன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் அ.தி.மு.க. நிர்வாகிகள் மகேஷ்பாபு, எம்.மகேந்திரன், சி.துரை, அரங்கநாதன், ஏ.ஜனார்த்தனம், எஸ்.கார்த்திகேயன், ரமேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story