அரசு கல்லூரியில் பி.எட். சேர இடம் கிடைத்தும் பண வசதியின்றி தவித்த மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை


அரசு கல்லூரியில் பி.எட். சேர இடம் கிடைத்தும் பண வசதியின்றி தவித்த மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை
x
தினத்தந்தி 4 Aug 2018 12:10 AM GMT (Updated: 4 Aug 2018 12:10 AM GMT)

அரசு கல்லூரியில் பி.எட். சேர இடம் கிடைத்தும் பண வசதியின்றி தவித்த மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்க கலெக்டர் நடவடிக்கை எடுத்தார்.

திருவண்ணாமலை,

தண்டராம்பட்டு அகரம்பள்ளிப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் சவுமியா (வயது 21). இவரது தந்தை ஆறுமுகம் சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். தாயின் பராமரிப்பில் உள்ளார்.

10-ம் வகுப்பில் 87 சதவீதம், பிளஸ்-2 தேர்வில் 67 சதவீதம், பி.எஸ்சி. (விலங்கியல்) பட்டப்படிப்பில் 73 சதவீதம் மதிப்பெண்கள் பெற்று உள்ளார். அதேபோல் அவரது தோழியான போளூர் தாலுகா செம்மியமங்கலம் கிராமத்தை சேர்ந்த விவசாயி வெங்கடேசன் மகள் அமுதா (21) என்பவரும் 10-ம் வகுப்பில் 86 சதவீதம், பிளஸ்-2 தேர்வில் 75 சதவீதம், பி.எஸ்சி. (வேதியியல்) பட்டப்படிப்பில் 78 சதவீதம் மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்று உள்ளார்.

சமீபத்தில் நடந்த பி.எட். சேர்க்கைக்கு இவர்கள் இருவரும் விண்ணப்பித்து இருந்தனர். இவர்களுக்கு தகுதி அடிப்படையில் சென்னையில் உள்ள வெலிங்டன் அரசு கல்வியியல் கல்லூரியில் சேர்ந்து படிக்க வாய்ப்பு கிடைத்தது. ஆனால் விடுதியில் சேர இடம் கிடைக்கவில்லை. தனியார் விடுதியில் சேர்ந்தால் மாதம் ரூ.3 ஆயிரம் செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டது. இதனால் இவர்கள் இருவரும் தொடர்ந்து படிக்க முடியாத நிலை ஏற்பட்டது.

கலெக்டரிடம் மனு

கடந்த வாரம் நடந்த மக்கள் குறை தீர்வு நாள் கூட்டத்தில் இவர்கள் இருவரும் கலெக்டர் கே.எஸ்.கந்தசாமியிடம் பி.எட். படிக்க உதவி செய்யக் கோரி மனு அளித்தனர். அதைத்தொடர்ந்து அரசு கல்வியியல் கல்லூரி முதல்வர்களிடம் தொடர்பு கொண்டு 2 மாணவிகளுக்கும் வேலூரில் உள்ள அரசு கல்வியியல் கல்லூரியில் சேர்க்கை வழங்க கலெக்டர் நடவடிக்கை எடுத்தார்.

மேலும் 2 மாணவிகளுக்கும் வேலூரில் உள்ள கல்லூரி மாணவிகளுக்கான அரசு விடுதியில் சேரவும் ஏற்பாடு செய்தார்.

உதவித்தொகை

இந்த நிலையில் பி.எட். படிக்க வாய்ப்பு கிடைத்த மாணவிகள் அமுதா, சவுமியா ஆகியோர் மகிழ்ச்சி அடைந்தனர். இதையடுத்து திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து கலெக்டர் கந்தசாமியை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தனர். மேலும் 2 மாணவிகளின் கல்லூரி கல்வி கட்டண தொகை செலுத்துவதற்காக ரூ.10 ஆயிரம் கல்வி உதவித்தொகைக்கான காசோலையை அவர்களிடம் கலெக்டர் வழங்கினார். 

Next Story