லால்பாக்கில் சுதந்திர தினவிழா மலர் கண்காட்சி முதல்-மந்திரி குமாரசாமி தொடங்கி வைத்தார்


லால்பாக்கில் சுதந்திர தினவிழா மலர் கண்காட்சி முதல்-மந்திரி குமாரசாமி தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 5 Aug 2018 4:00 AM IST (Updated: 4 Aug 2018 10:38 PM IST)
t-max-icont-min-icon

பெங்களூரு லால்பாக்கில் சுதந்திர தின விழா மலர் கண்காட்சியை முதல்-மந்திரி குமாரசாமி நேற்று தொடங்கி வைத்தார்.

பெங்களூரு, 

பெங்களூரு லால்பாக்கில் சுதந்திர தின விழா மலர் கண்காட்சியை முதல்-மந்திரி குமாரசாமி நேற்று தொடங்கி வைத்தார். இந்த கண்காட்சியில் 1½ லட்சம் மலர்களால் போர் விமானங்கள், பீரங்கி, போர்க்கப்பல்கள் வடிவமைக்கப்பட்டுள்ளது.

மலர் கண்காட்சி தொடக்கம்

பெங்களூரு லால்பாக்கில் ஆண்டுதோறும் சுதந்திர தினம் மற்றும் குடியரசு தினத்தையொட்டி மலர் கண்காட்சி நடத்தப்படுவது வழக்கம். இந்த ஆண்டு சுதந்திர தினத்தையொட்டி 208-வது மலர் கண்காட்சி நேற்று தொடங்கியது. இந்த ஆண்டு மலர் கண்காட்சியில் ராணுவத்தின் முப்படைகளையும் கவுரப்படுத்தும் விதமாக ராணுவத்தில் பயன்படுத்தப்படும் போர் விமானங்கள், பீரங்கி வண்டிகள், போர்க்கப்பல் உள்ளிட்டவை லால்பாக்கில் உள்ள கண்ணாடி மாளிகைகளில் மலர்களால் வடிவமைத்து வைக்கப்பட்டுள்ளன. குறிப்பாக இமயமலையின் அடிவாரத்தில் உள்ள சியாச்சின் விமான படைதளமும் தத்ரூபமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

இதற்காக தமிழ்நாடு ஊட்டி, மராட்டிய மாநிலம் புனே மற்றும் ஆலந்து நாட்டில் இருந்து வரவழைக்கப்பட்ட 1.50 லட்சம் மலர்கள் பயன்படுத்தப்பட்டு உள்ளன. இந்த மலர் கண்காட்சியை முதல்-மந்திரி குமாரசாமி நேற்று காலையில் தொடங்கி வைத்தார். பின்னர் அவர், லால்பாக் கண்ணாடி மாளிகையில், மலர்களால் வடிவமைக்கப்பட்டுள்ள அமர் ஜவான் ஜோதிக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்ச்சியில் தோட்டக்கலைத்துறை மந்திரி எம்.சி.மனகுலி, பெங்களூரு மாநகராட்சி மேயர் சம்பத்ராஜ், மேல்-சபை உறுப்பினர் டி.ஏ.ஷரவணா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

பின்னர் முதல்-மந்திரி குமாரசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-

ராணுவத்திற்கு பெருமை சேர்க்கும்...

பெங்களூரு லால்பாக்கில் இந்த ஆண்டு சுதந்திர தினத்தையொட்டி நடைபெறும் மலர் கண்காட்சியில் ராணுவத்தின் முப்படைகளுக்கும் பெருமை சேர்க்கும் வகையில் பீரங்கி வண்டிகள், ராணுவ விமானங்கள் மற்றும் ராணுவத்தில் பயன்படுத்தப்படும் உபகரணங்கள் மலர்களால் வடிவமைத்து வைக்கப்பட்டுள்ளன. அதனை பார்க்க மிகவும் சந்தோஷமாக உள்ளது.

ராணுவத்திற்கு மரியாதை செலுத்தும் விதமாக இந்த மலர் கண்காட்சி அமைந்துள்ளது. ரூ.1½ கோடி செலவில் ராணுவத்தில் பயன்படுத்தும் விமானங்கள், பீரங்கிகள் மலர்களால் மிகவும் சிறப்பாக வடிவமைக்கப்பட்டு உள்ளன. லால்பாக்கில் நடைபெறும் மலர் கண்காட்சியை நமது நாட்டை சேர்ந்தவர்கள் தவிர வெளிநாட்டை சேர்ந்தவர்களையும் கண்டுகளித்து வருகின்றனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

மாணவர்களுக்கு இலவசம்

லால்பாக்கில் நேற்று தொடங்கிய மலர் கண்காட்சி வருகிற 15-ந் தேதி வரை 12 நாட்கள் நடைபெற உள்ளது. மலர் கண்காட்சியை காண வருபவர்களுக்கு ரூ.70 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. சிறுவர்களுக்கு ரூ.20 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது. மேலும் அரசு, தனியார் பள்ளி மாணவ, மாணவிகள் வருகிற 6,7,8,9,10 மற்றும் 13-ந் தேதிகளில் இலவசமாக மலர் கண்காட்சியை பார்த்து ரசிக்கலாம்.

லால்பாக்கில் உள்ள சில மரங்களில் தேன்கூடுகள் இருப்பதால், அங்கு பொதுமக்கள் செல்லக்கூடாது என்று அறிவிப்பு பலகைகள் வைக்கப்பட்டுள்ளன. மேலும் லால்பாக்கில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டு உள்ளன. கண்காட்சி தொடங்கிய முதல் நாளான நேற்றே பொதுமக்கள் திரண்டு வந்து மலர்களால் வடிவமைக்கப்பட்ட போர் விமானங்கள், பீரங்கி, போர்க்கப்பல் உள்ளிட்டவற்றை ஆர்வத்துடன் பார்த்து ரசித்தனர். மேலும் வாலிபர்கள், இளம்பெண்கள் ‘செல்பி‘ புகைப்படம் எடுத்தும் மகிழ்ந்தனர்.

Next Story