நெல்லை மாவட்டத்தில் கிராம பகுதிகளில் சுகாதார நிலை குறித்து கணக்கெடுப்பு கலெக்டர் ஷில்பா தகவல்
நெல்லை மாவட்டத்தில் கிராம பகுதிகளில் சுகாதார நிலை குறித்து தூய்மை கணக்கெடுப்பு நடத்தப்பட்டு வருவதாக, நெல்லை மாவட்ட கலெக்டர் ஷில்பா தெரிவித்து உள்ளார்.
நெல்லை,
நெல்லை மாவட்டத்தில் கிராம பகுதிகளில் சுகாதார நிலை குறித்து தூய்மை கணக்கெடுப்பு நடத்தப்பட்டு வருவதாக, நெல்லை மாவட்ட கலெக்டர் ஷில்பா தெரிவித்து உள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-
கணக்கெடுப்பு
மத்திய அரசின் குடிநீர் மற்றும் சுகாதார அமைச்சகம் மூலம் நெல்லை மாவட்டத்தில் உள்ள கிராமங்களில் தற்போது சுகாதார நிலை குறித்து கணக்கெடுக்கப்படுகிறது.
பள்ளிக்கூடங்கள், அங்கன்வாடி மையங்கள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், சந்தைகள் மற்றும் வழிபாட்டு தலங்களில் நேரடி ஆய்வு செய்யப்படுகிறது. கிராம பகுதிகளில் உள்ள பொதுமக்களிடம் கிராமத்தில் நிலை குறித்து கருத்துகள் கேட்கப்படுகிறது.
தரவரிசை
ஒவ்வொரு பஞ்சாயத்திலும் தூய்மை நிலை கணக்கெடுப்பு செய்யப்பட்டு, அதன் அடிப்படையில் பஞ்சாயத்துக்கள் தரவரிசை படுத்தப்பட உள்ளன. இந்த தூய்மை கணக்கெடுப்பானது, தூய்மை பாரத இயக்கத்தின் விரிவாக செயல்பாடுகளின் அடிப்படையில் பொது இடங்களில் தூய்மை, பொதுமக்களிடம் கருத்து கேட்டு அறிதல், திட்ட செயலாக்கம் போன்றவற்றின் பரிந்துரைகளின் அடிப்படையில் பஞ்சாயத்துக்கள் மதிப்பீடு செய்யப்படும்.
அதன் அடிப்படையில் மாவட்டத்தின் அளவீடு தரவரிசை செய்யப்படும். மாவட்டங்களின் தரவரிசை அடிப்படையில் தேசிய அளவில் மாநிலங்கள் அளவீடு செய்யப்படும். இதில் சிறப்பாக செயல்படும் மாநிலங்கள் மற்றும் மாவட்டங்களுக்கு அடுத்த ஆண்டு அக்டோபர் மாதம் 2-ந் தேதி விருதுகள் வழங்கப்படும்.
31-ந் தேதி வரை....
நெல்லை மாவட்டத்தில் வருகிற 31-ந் தேதி வரை கணக்கெடுக்கும் பணி நடக்க இருக்கிறது. எனவே தங்களது பஞ்சாயத்துகளில் தூய்மை கணக்கெடுப்பு மேற்கொள்ள வரும் ஆய்வு குழுவினர்களுக்கு முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளது.