பஸ் மோதி ரெயில்வே ஊழியர் சாவு: வேகத்தடை அமைக்க கோரி கிராம மக்கள் சாலை மறியல்


பஸ் மோதி ரெயில்வே ஊழியர் சாவு: வேகத்தடை அமைக்க கோரி கிராம மக்கள் சாலை மறியல்
x
தினத்தந்தி 5 Aug 2018 3:30 AM IST (Updated: 5 Aug 2018 12:17 AM IST)
t-max-icont-min-icon

சங்கரன்கோவில் அருகே பஸ் மோதி ரெயில்வே ஊழியர் இறந்ததை தொடர்ந்து அந்த பகுதியில் வேகத்தடை அமைக்க கோரி கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

சங்கரன்கோவில்,

சங்கரன்கோவில் அருகே பஸ் மோதி ரெயில்வே ஊழியர் இறந்ததை தொடர்ந்து அந்த பகுதியில் வேகத்தடை அமைக்க கோரி கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

விபத்தில் ரெயில்வே ஊழியர் பலி

நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள குவளைக்கண்ணி கிராமத்தை சேர்ந்தவர் பாலமுருகன் (வயது 45). இவர் விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் ரெயில் நிலையத்தில் வேலை செய்து வந்தார். பாலமுருகன் நேற்று முன்தினம் மாலை வேலையை முடித்து விட்டு, குவளைக்கண்ணிக்கு மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். குவளைக்கண்ணிக்கு வந்தபோது, அந்த வழியாக வந்த அரசு பஸ் மோதி பலியானார்.

இச்சம்பவத்தை தொடர்ந்து அப்பகுதியில் பொதுமக்கள் திரண்டனர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பாக சாலை விரிவாக்க பணியின் போது வேகத்தடை அகற்றப்பட்டு விபத்துகள் ஏற்படுவதாகவும், எனவே மீண்டும் வேகத்தடை அமைக்க வலியுறுத்தினர். இதுகுறித்த தகவல் கிடைத்ததும் சங்கரன்கோவில் துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜேந்திரன், தாசில்தார் ராஜேந்திரன் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அங்கு திரண்டிருந்த பொது மக்களிடம் சனிக்கிழமை காலை வேகத்தடை அமைப்பதாக உறுதி கூறினர்.

சாலை மறியல்

இந்த நிலையில் நேற்று காலை வேகத்தடை அமைக்காததை கண்டு அதிர்ச்சியடைந்த குவளைக்கண்ணி கிராம மக்கள் காலை 11.30 மணியளவில் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் சங்கரன்கோவில்-ராஜபாளையம் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தகவல் அறிந்து வந்த போலீசார் வாடிக்கோட்டை, பனையூர் வழியாக வாகனங்களை திருப்பி விட்டனர். மேலும் போலீசார் கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் அதனை ஏற்க மறுத்து தொடர்ந்து சாலைமறியலில் ஈடுபட்டனர். இங்கு வேகத்தடை அமைக்கும் வரை கலைந்து செல்ல மாட்டோம் என அவர்கள் தெரிவித்தனர்.

மதியம் 2 மணிக்கு மேல் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் வந்தனர். அங்கு வேகத்தடை அமைப்பதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டதை தொடர்ந்து கிராம மக்கள் தங்களது போராட்டத்தை கைவிட்டனர். காலை 11.30 மணிக்கு தொடங்கிய இந்த சாலை மறியல் போராட்டம் மதியம் 2.30 மணி வரை அதாவது 3 மணி நேரம் நடந்த. மறியலில் போது சிலர் கருப்புக் கொடிகளையும் தங்களது கைகளில் ஏந்தியிருந்தனர்.


Next Story