மதுரையில் இருந்து திருச்செந்தூர் சென்ற வேன் தலைகுப்புற கவிழ்ந்து மாணவி பலி


மதுரையில் இருந்து திருச்செந்தூர் சென்ற வேன் தலைகுப்புற கவிழ்ந்து மாணவி பலி
x
தினத்தந்தி 5 Aug 2018 3:00 AM IST (Updated: 5 Aug 2018 12:18 AM IST)
t-max-icont-min-icon

மதுரை திருநகரில் இருந்து திருச்செந்தூர் கோவிலுக்கு சென்றவர்களின் வேன் கவிழ்ந்ததில் 10–ம் வகுப்பு மாணவி பலியானார். 12 பேர் காயம் அடைந்தனர்.

அருப்புக்கோட்டை,

மதுரை திருநகரை சேர்ந்தவர் நாகசுப்பிரமணியன். இவர் தனது குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுடன் ஒரு வேனில் நேற்று மாலை திருச்செந்தூர் கோவிலுக்கு சாமி கும்பிட புறப்பட்டார். வேனை மாரிமுத்து என்பவர் ஓட்டிச்சென்றார். 18 பேர் அதில் வந்தனர்.

அருப்புக்கோட்டை ராமசாமிபுரம் விலக்கு பகுதியில் 4 வழிச்சாலையில் வேன் சென்றுகொண்டிருந்தபோது திடீரென்று கட்டுப்பாட்டை இழந்து தடுப்புச்சுவரில் மோதியது. மேலும் சாலையின் எதிர்புறம் சென்று தலைகுப்புற கவிழ்ந்தது.

அருப்புக்கோட்டை டவுன் போலீசார் விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். இந்த விபத்தில் வேனை ஓட்டிவந்த மாரிமுத்துவின் மகளும் 10–ம் வகுப்பு மாணவியுமான சிந்தியா(வயது15) அதே இடத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் நாகசுப்பிரமணியனின் சகோதரர் ராஜ இளங்கோவன் (38), நித்யா(34), விக்னேஷ் (20) ஆகிய 3 பேர் படுகாயம் அடைந்து மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

குருநாதன் (15), மகாலட்சுமி (60), சீதாலட்சுமி (11),மகேஸ்வரி (40), ஐஸ்வர்யா (19), சாரதா (37), மீனாட்சி(45), சத்யா (33) மற்றும் வேனை ஓட்டி வந்த மாரிமுத்து ஆகிய 9 பேர் அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். விபத்து குறித்து அருப்புக்கோட்டை டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.


Next Story