வைகை ஆற்றில் மணல் குவாரி அமைக்கும் நடவடிக்கையை கைவிட வேண்டும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு வலியுறுத்தல்


வைகை ஆற்றில் மணல் குவாரி அமைக்கும் நடவடிக்கையை கைவிட வேண்டும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு வலியுறுத்தல்
x
தினத்தந்தி 5 Aug 2018 4:00 AM IST (Updated: 5 Aug 2018 12:22 AM IST)
t-max-icont-min-icon

வைகை ஆற்றில் மணல் குவாரி அமைக்கும் நடவடிக்கையை தமிழக அரசு கைவிட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி வலியுறுத்தியுள்ளது.

சிவகங்கை,

சிவகங்கை மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட அமைப்புக்குழு கூட்டம், அதன் உறுப்பினர் ஆறுமுகம் தலைமையில் சிவகங்கையில் நடந்தது. கூட்டத்தில் மாநிலக்குழு உறுப்பினர் சாமுவேல்ராஜ், மாவட்ட அமைப்பாளர் சின்னத்துரை மற்றும் உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். பின்னர் கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

சிவகங்கை மாவட்டத்தில் 2½ லட்சம் ஏக்கர் பரப்பளவில் பயிர்கள் சாகுபடி செய்யப்படுகிறது. பாசனத்திற்கு 5 ஆயிரம் கண்மாய்களும், 20 ஆயிரம் குளம், குட்டை, ஊருணிகள் உள்ளன. இதில் 40 ஆயிரம் ஏக்கர் ஒருபோக சாகுபடிக்கு வைகை ஆற்றில் தண்ணீர் வந்தால் மட்டுமே சாகுபடி வாய்ப்பு ஏற்படும். திருப்புவனம், மானாமதுரை, இளையான்குடி ஆகிய பகுதிகளில் வைகை ஆறுதான் பாசன தண்ணீராகும். வைகை ஆற்றின் நீர்வளத்தை, நீராதாரத்தை நம்பி 72 கூட்டுக்குடிநீர் திட்டங்கள், 15 ஆயிரம் பாசன கிணறுகள் உள்ளன. இந்தநிலையில் மாவட்டத்தில் கடந்த 5 ஆண்டுகளுக்கு மேலாக தொடர்ந்து வஞ்சித்து வரும் மழையால் விவசாயம் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. ஏராளமான விவசாயிகள் தங்களது விவசாய தொழிலை விட்டு மாற்று தொழிலுக்கு சென்றுவிட்டனர். இதற்கிடையில் ஆறு, கண்மாய்களில் தொடரும் மணல் திருட்டால் மேலும் நிலத்தடி நீர்மட்டம் பாதிக்கப்பட்டு அதல பாதாளத்திற்கு சென்றுவிட்டது.

இதற்கிடையில் தற்போது மானாமதுரை அருகே தெ.புதுக்கோட்டை, செய்களத்தூர், வாகுடி உள்ளிட்ட பகுதிகளில் வைகை ஆற்றில் குவாரி அமைத்து மணல் அள்ள தமிழக அரசு முடிவெடுத்து, அதற்கான பணிகளை தொடங்கியுள்ளனர். ஏற்கனவே வைகை ஆற்றில் அனுமதியின்றி மணல் அள்ளியதால் மணல் இன்றி ஆறு கற்பாறைகளாகவே காட்சி தருகின்றன. இந்தநிலையில் குவாரி அமைத்தால் மேலும் இப்பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் கடுமையாக பாதிக்கப்படும். மேலும் விவசாயிகளுக்கும் பாசனத்திற்கு தண்ணீர் கிடைக்காமல் அவதியடையும் நிலை உள்ளது. எனவே விவசாயிகளின் நலன் கருதி மணல் குவாரி அமைக்கும் நடவடிக்கையை தமிழக அரசு கைவிட வேண்டும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


Next Story