தூத்துக்குடி மாவட்டத்தில் நடப்பு ஆண்டில் 60 சதவீதம் உப்பு உற்பத்தி செய்ய வாய்ப்பு உற்பத்தியாளர்கள் கவலை
தூத்துக்குடி மாவட்டத்தில் நடப்பு ஆண்டில் 60 சதவீதம் உப்பு உற்பத்தி செய்ய வாய்ப்பு இருப்பதால் உற்பத்தியாளர்கள் கவலை அடைந்துள்ளனர்.
தூத்துக்குடி,
தூத்துக்குடி மாவட்டத்தில் நடப்பு ஆண்டில் 60 சதவீதம் உப்பு உற்பத்தி செய்ய வாய்ப்பு இருப்பதால் உற்பத்தியாளர்கள் கவலை அடைந்துள்ளனர்.
உப்பு உற்பத்திஇந்தியாவில் உப்பு உற்பத்தியில் குஜராத் முதல் இடத்தில் உள்ளது. அதனை தொடர்ந்து அதிக அளவில் உப்பு உற்பத்தி செய்யப்படும் இடமாக தமிழகம் உள்ளது. குறிப்பாக தூத்துக்குடி மாவட்டத்தில் அதிக உப்பு உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. தூத்துக்குடி மாவட்டத்தில் 24 ஆயிரத்து 300 ஏக்கர் பரப்பில் உப்பு உற்பத்தி நடக்கிறது. ஆண்டுக்கு சராசரியாக 24 லட்சம் டன் உப்பு உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. கடந்த சில ஆண்டுகளாக குஜராத்தில் இருந்து தூத்துக்குடிக்கு உப்பு வந்ததால், தூத்துக்குடி உப்புக்கு விலை கிடைக்காமல் இருந்தது. ஆனால் கடந்த ஓராண்டாக குஜராத் உப்பு வரவில்லை. இதனால் தூத்துக்குடி உப்பு உற்பத்தியாளர்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர். கடந்த ஆண்டு 22 லட்சம் டன் உப்பு உற்பத்தி செய்யப்பட்டது. நடப்பு ஆண்டில் அவ்வப்போது பெய்த மழையால் உப்பு உற்பத்தி பாதிக்கப்பட்டு பின்னடைவை சந்தித்து உள்ளது. நடப்பு ஆண்டில் சுமார் 15 லட்சம் டன் வரை மட்டுமே உப்பு உற்பத்தி செய்ய வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் உற்பத்தியாளர்கள் கவலை அடைந்துள்ளனர். மேலும் உப்பின் தேவை அதிகரித்து, விலை உயரும் அபாயம் உள்ளது.
60 சதவீதம்இதுகுறித்து சிறிய உப்பு உற்பத்தியாளர் சங்க செயலாளர் ஏ.ஆர்.எஸ்.தனபாலன் கூறியதாவது:–
தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த ஆண்டு 90 சதவீதம் உப்பு உற்பத்தி செய்யப்பட்டது. அப்போது, இருப்பு வைக்கப்பட்ட உப்பு விற்பனை செய்யப்பட்டு விட்டன. கடந்த சில மாதங்களாக அவ்வப்போது பெய்த மழை காரணமாக உப்பு உற்பத்தி பாதிக்கப்பட்டு இருக்கிறது. அதே நேரத்தில் உப்பின் தேவை அதிகரித்து வருகிறது. ஆனால் உற்பத்தி 60 சதவீதத்தை மட்டுமே எட்ட வாய்ப்பு உள்ளது. இன்னும் ஓரிரு மாதங்களில் மழைக்காலம் தொடங்கி விடும் அதனால் உப்பு உற்பத்தி முழு அளவை எட்ட முடியாது. இதனால் உப்பு தட்டுப்பாடு ஏற்பட்டு விலை உயர வாய்ப்பு உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.