வீரலெட்சுமி அம்மன் கோவிலில் ஆடித்திருவிழா தலையில் தேங்காய் உடைத்து பக்தர்கள் நேர்த்திக்கடன்


வீரலெட்சுமி அம்மன் கோவிலில் ஆடித்திருவிழா தலையில் தேங்காய் உடைத்து பக்தர்கள் நேர்த்திக்கடன்
x
தினத்தந்தி 5 Aug 2018 4:00 AM IST (Updated: 5 Aug 2018 12:37 AM IST)
t-max-icont-min-icon

குறிச்சிப்பட்டி வீரலெட்சுமி அம்மன் கோவிலில் ஆடித்திருவிழாவையொட்டி தலையில் தேங்காய் உடைத்து பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தி வழிபாடு நடத்தினர்.

அரிமளம்,

புதுக்கோட்டை மாவட்டம், அரிமளம் ஒன்றியம், குறிச்சிப்பட்டி கிராமத்தில் பிரசித்தி பெற்ற வீரலெட்சுமி அம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆடித்திருவிழாவையொட்டி நேற்று அதிகாலை குரும்பர் சமுதாயம் சாந்துகுல சுச்சன் வம்சத்தை சேர்ந்த பக்தர்கள் வீரலெட்சுமி அம்மனை அலங்கரித்து பல்லக்கில் வைத்து காட்டுகோவிலுக்கு எடுத்து சென்றனர். அங்கு அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் செய்தனர். பின்னர் அம்மன் முன்பு பக்தர்களின் தலையில் தேங்காய் உடைக்கப்பட்டது. அதனை தொடர்ந்துஅம்மன் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு மீண்டும் கோவிலை அடைந்தது. அதனை தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. பின்னர் கோவில் முன்பு ஆண்கள் மற்றும் பெண் பக்தர்கள் கூடி பயபக்தியுடன் நின்றனர்.

இதனை தொடர்ந்து கோவில் பூசாரி வெள்ளைசாமி கோவிலுக்குள் சென்று வீரலெட்சுமிஅம்மனை வணங்கினார். பின்னர் வாசலில் காத்திருந்த பக்தர்களின் தலையில் தேங்காய்களை உடைத்து நேர்த்திக்கடன் வழிபாட்டை நடத்தினர். அப்போது பக்தர்கள் பூசாரி காலில் விழுந்து வணங்கி ஆசி பெற்றனர். இதையடுத்து பெண்கள் தங்களுடைய கைக்குழந்தைகளுடன் கோவில் முன்பு அமர்ந்தனர். தொடர்ந்து பெண்கள் மற்றும் குழந்தைகளின் சிலரின் தலை முடிகளை பூசாரி வெட்டினார். இதை தொடர்ந்து தங்கள் வேண்டுதல் நிறைவேறியதாக எண்ணிய பெண்கள் தங்கள் கைக்குழந்தைகளுடன் புறப்பட்டு சென்றனர். விழாவின் தொடர்ச்சியாக கோவிலில் இருந்து மற்றொரு பூசாரி குழந்தைகள், இளம்பெண்கள், ஆண்கள் பெண்கள் என அனைவரையும் சாட்டையால் அடித்தார். அப்போது அம்மன் முன்பு நின்று சாட்டையால் அடி வாங்க பக்தர்கள் போட்டி போட்டுக்கொண்டு வந்து பூசாரி முன் நின்று சாட்டை அடி வாங்கி பயபக்தியுடன் சென்றனர்.

பின்னர் கோவில் பூசாரி வெள்ளைச்சாமி ஆணிகள் அடித்த காலணிகளை அணிந்து கோவிலை சுற்றி வலம் வந்தார். தொடர்ந்து திரளான பெண்கள் கோவில் வளாகத்தில் பொங்கல் வைத்து அம்மனை வழிபட்டனர். இதில் தேனி, திண்டுக்கல், திருச்சி, புதுக்கோட்டை, கோயம்புத்தூர், திருப்பூர், பழனி, சென்னை, கடலூர், மதுரை உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த கோவில் குடிமக்கள் மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

ஆவூர் அருகே சூரியூர் கிராமத்தில் ஆலடி கருப்புசாமி கோவில் உள்ளது. இக்கோவிலில் உடப்புகருப்பு, பெரியகாண்டி அம்மன், மாகாமுனி, பட்டவன் ஆகிய பரிவார தெய்வங்களும் உள்ளன. இக்கோவிலில் ஆண்டு தோறும் ஆடித்திருவிழா நடைபெறுவது வழக்கம். அதேபோல இந்தாண்டும் திருவிழா காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. இதைதொடர்ந்து கடந்த வியாழக்கிழமை குதிரை எடுப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. விழாவின் தொடர்ச்சியாக நேற்று முன்தினம் பெண்கள் கோவில் முன்பு பொங்கல் வைத்து அம்மனுக்கு வழிபாடு நடத்தினர். மேலும் மதியம் கருப்பசாமிக்கு உதிரம் ஏந்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து பக்தர்கள் தங்களது வேண்டுதல் நிறைவேறும் வகையில் 100-க்கும் மேற்பட்ட ஆடுகளை வெட்டி கருப்பசாமிக்கு பூஜை நடத்தினர். பின்னர் சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. தொடர்ந்து பலியிடப்பட்ட ஆடுகளை அங்கேயே சமையல் செய்யப்பட்டு அன்னதானம் நடைபெற்றது. இதில் சூரியூர், ஆலங்குளம், பேராம்பூர், ஆவூர், தென்னலூர், விராலிமலை ஆகிய பல்வேறு பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். 

Next Story