மடிப்பாக்கத்தில் அ.தி.மு.க. பிரமுகரை அரிவாளால் வெட்டிய வழக்கில் 8 பேர் கைது
மடிப்பாக்கத்தில், அ.தி.மு.க. பிரமுகரை அரிவாளால் வெட்டிய வழக்கில் 8 பேரை போலீசார் கைது செய்தனர்.
ஆலந்தூர்,
சென்னையை அடுத்த ஆதம்பாக்கம் தில்லைகங்கா நகரைச் சேர்ந்தவர் சீனி சரவணன்(வயது 42). அ.தி.மு.க. பிரமுகரான இவர், கடந்த சில மாதங்களுக்கு முன்பு கட்சியில் பதவி தருவதாக கூறி பணம் வாங்கி ஏமாற்றியதாக முன்னாள் அ.தி.மு.க. அமைச்சர் உள்பட பலர் மீது சென்னை மாநகர போலீசில் புகார் செய்து இருந்தார்.
இதற்கிடையில் கடந்த மாதம் 4-ந்தேதி மடிப்பாக்கம் கார்த்திகேயபுரத்தில் மோட்டார் சைக்கிளில் சென்ற சீனி சரவணனை, ஆட்டோவில் வந்த ஒரு கும்பல் வழிமறித்து அரிவாளால் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பி ஓடிவிட்டது.
8 பேர் கைது
இதில் படுகாயமடைந்த சீனிசரவணன், தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். இது தொடர்பாக பரங்கிமலை போலீஸ் துணை கமிஷனர் முத்துசாமி உத்தரவின்பேரில் மடிப்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, இன்ஸ்பெக்டர் ஜெயசங்கர் தலைமையில் தனிப்படை அமைத்து விசாரித்தனர்.
பின்னர் இந்த சம்பவம் தொடர்பாக நன்மங்கலத்தைச் சேர்ந்த சுந்தர்(57), அயனாவரத்தைச் சேர்ந்த சரவணன்(46), மும்பையைச் சேர்ந்த லட்சுமணன்(47), தாம்பரத்தைச் சேர்ந்த வேலு(45), கார்த்திக்(37), அவருடைய சகோதரர் சிவகாளை(35), மணி(38) மற்றும் 17 வயது சிறுவன் ஆகிய 8 பேரை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.
சமூக வலைத்தளத்தில் அவதூறு
கைதான நன்மங்கலததை சேர்ந்த சுந்தர், கட்டிடங்கள் கட்டுமான ஒப்பந்ததாரர் ஆவார். இவர், வீடுகளை கட்டி விற்பனை செய்து வந்தார். இவ்வாறு இவர் கட்டும் வீடுகள், கடல் மணலில் கட்டப்படுவதாக சமூக வலைத்தளங்களில் சீனிசரவணன் அவதூறு பரப்பியதாக கூறப்படுகிறது.
இதனால் சுந்தர் கட்டிய வீடுகளை பொதுமக்கள் வாங்க தயங்கியதாகவும், தனது வீடுகளை விற்க முடியாமல் செய்த சீனிசரவணனை பழிவாங்கவே தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து அவரை வெட்டியதாகவும் போலீசாரிடம் சுந்தர் ஒப்புக்கொண்டார்.
இந்த வழக்கில் மேலும் சிலரை போலீசார் தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story