கொடுங்கையூரில் டிரைவரை கத்தியை காட்டி மிரட்டி வாடகை கார் கடத்தல் 2 பேர் கைது


கொடுங்கையூரில் டிரைவரை கத்தியை காட்டி மிரட்டி வாடகை கார் கடத்தல் 2 பேர் கைது
x
தினத்தந்தி 5 Aug 2018 4:30 AM IST (Updated: 5 Aug 2018 12:56 AM IST)
t-max-icont-min-icon

டிரைவரை கத்தியை காட்டி மிரட்டி வாடகை காரை கடத்திச்சென்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

பெரம்பூர், 

செங்குன்றம் திருமலை நகரைச் சேர்ந்தவர் சிவராசன் (வயது 34). வாடகை கார் டிரைவரான இவர், பெரம்பூரில் இருந்து கொடுங்கையூருக்கு பயணிகள் 4 பேரை தனது காரில் ஏற்றிச்சென்றார்.

அப்போது காரில் இருந்த 4 பேரும் திடீரென டிரைவர் சிவராசனை கத்தியை காட்டி மிரட்டி காரை நிறுத்தினர். பின்னர் அவரை கீழே தள்ளிவிட்டு காரை கடத்திச் சென்றனர்.

இதனால் அதிர்ச்சி அடைந்த சிவராசன் கூச்சலிட்டார். பின்னர் பின்னால் வந்த ஒருவரின் மோட்டார் சைக்கிளில் ஏறி தனது காரை பின்தொடர்ந்தபடி விரட்டிச்சென்றார்.

2 பேரை மடக்கி பிடித்தனர்

இதற்கிடையில் மர்மநபர்கள் கடத்திச்சென்ற கார், கொடுங்கையூர் முத்தமிழ்நகர் அருகே வேகமாக சென்றபோது, எதிரே வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

இதனால் அக்கம்பக்கத்தில் இருந்த பொதுமக்கள் அங்கு கூடிவிட்டனர். அவர்கள் காரில் இருந்த 4 பேரிடமும் எதற்காக காரை வேகமாக ஓட்டி வந்து மோட்டார் சைக்கிள் மீது மோதினீர்கள்? என வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.அப்போது அந்த காரை பின்தொடர்ந்து விரட்டி வந்த டிரைவர் சிவராசன், தன்னை மிரட்டி தனது காரை கடத்திச்சென்றதாக கூறினார். இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள், காரில் இருந்த 4 பேரையும் மடக்கி பிடிக்க முயன்றனர். அதில் 2 பேர் தப்பி ஓடிவிட்டனர். 2 பேரை மட்டும் பொதுமக்கள் மடக்கி பிடித்து கொடுங்கையூர் போலீசில் ஒப்படைத்தனர்.

கொலை செய்ய திட்டம்

போலீசார் நடத்திய விசாரணையில் அவர்கள், சென்னை ஜாம்பஜாரைச் சேர்ந்த புல்லட் விக்ரம் என்ற விக்ரம்குமார் (28) மற்றும் சென்னை அண்ணாநகர் அம்பேத்கர் சந்திப்பைச் சேர்ந்த கார்த்திக் (24) என்பதும், பிரபல ரவுடியான விக்ரம்குமார் மீது போலீஸ் நிலையத்தில் கொலை வழக்குகள் உள்ளதும் தெரிந்தது.

மேலும் விசாரணையில் கொடுங்கையூர் பகுதியில் முக்கிய புள்ளி ஒருவரை கொலை செய்வதற்காக சொந்த காரில் சென்றால் தெரிந்துவிடும் என்பதால் வாடகை காரை கடத்தி வந்து கொலை செய்ய திட்டமிட்டதும் தெரியவந்தது.

இதையடுத்து விக்ரம்குமார், கார்த்திக் இருவரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து கடத்தப்பட்ட காரை மீட்டனர். பின்னர் 2 பேரையும் சிறையில் அடைத்தனர். மேலும் தப்பி ஓடிய இவர்களின் கூட்டாளிகள் 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர். 

Next Story