டீ வியாபாரியிடம் வழிப்பறி செய்ததை தட்டிக்கேட்டதால் கம்ப்யூட்டர் என்ஜினீயரின் மோட்டார் சைக்கிளை பறித்துச்சென்ற கொள்ளையர்கள்
டீ வியாபாரியிடம் வழிப்பறி செய்ததை தட்டிக்கேட்ட கம்ப்யூட்டர் என்ஜினீயரிடம் கத்தியை காட்டி மிரட்டிய கொள்ளையர்கள், அவரது மோட்டார் சைக்கிளை பறித்துச்சென்றனர்.
அம்பத்தூர்,
சென்னை ஜாபர்கான்பேட்டையை சேர்ந்தவர் கிஷோர் (வயது 34). கம்ப்யூட்டர் என்ஜினீயரான இவர், அம்பத்தூர் தொழிற்பேட்டையில் உள்ள ஒரு கம்ப்யூட்டர் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு பணிமுடிந்து கிஷோர், தனது மோட்டார்சைக்கிளில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார்.
கோயம்பேடு-திருமங்கலம் இடையே உள்ள மங்களம் காலனி அருகே நள்ளிரவில் அவர் சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு இரவு நேரங்களில் சைக்கிளில் டீ வியாபாரம் செய்து வரும் சென்னை திருமங்கலம் என்.வி.என். நகரைச்சேர்ந்த முருகன்(35) என்பவரை ஆட்டோவில் வந்த 2 கொள்ளையர்கள் சரமாரியாக தாக்கி, அவரிடம் இருந்த ரூ.3 ஆயிரத்தை பறித்தனர். பின்னர் சைக்கிளுடன் அவரது டீ கேனையும் கீழே தள்ளிவிட்டனர்.
தட்டிக்கேட்டார்
இதை பார்த்த கிஷோர், டீ வியாபாரியிடம் வழிப்பறியில் ஈடுபட்ட கொள்ளையர்களிடம் தட்டிக்கேட்டார். மேலும் கொள்ளையர்கள் வந்த ஆட்டோவின் பதிவு எண்ணையும் குறித்துக்கொண்டு அங்கிருந்து செல்ல முயன்றார்.
இதனால் ஆத்திரம் அடைந்த கொள்ளையர்கள், கத்தியை காட்டி மிரட்டி கிஷோரின் மோட்டார் சைக்கிள், அவரிடம் இருந்த 150 ரூபாயை பறித்துக்கொண்டு தப்பிச்சென்று விட்டனர்.
இதுபற்றி முருகன், கிஷோர் இருவரும் அளித்த புகாரின்பேரில் திருமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை வலைவீசி தேடிவருகின்றனர்.
Related Tags :
Next Story