கண்காணிப்பு கேமராக்கள் அவசியம் குறித்து நடிகர் விவேக் தயாரித்த விழிப்புணர்வு குறும்படம்
கண்காணிப்பு கேமராக்களின் அவசியம் குறித்து நடிகர் விவேக் தயாரித்த விழிப்புணர்வு குறும்படத்தை சென்னை போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் வெளியிட்டார்.
சென்னை,
சி.சி.டி.வி. எனப்படும் கண்காணிப்பு கேமராக்கள் குற்ற வழக்குகளில் துப்பு துலக்குவதற்கும், குற்றவாளிகளை அடையாளம் கண்டு கைது செய்வதற்கும், குற்றச்செயல்களை கட்டுப்படுத்துவதற்கும் போலீசாருக்கு பெரிதும் உதவிகரமாக இருந்து வருகிறது.
எனவே சென்னை நகரில் கண்காணிப்பு கேமராக்கள் பொறுத்தும் நடவடிக்கையை போலீசார் ஊக்குவித்து வருகின்றனர். சென்னை போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன், அடுத்த மாதத்துக்குள் (செப்டம்பர்) கண்காணிப்பு கேமரா வளையத்துக்குள் சென்னை நகரை கொண்டு வருவதற்கான முயற்சியில் தீவிரம் காட்டி உள்ளார்.
அந்த வகையில் குடியிருப்பு பகுதிகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்துவதன் அவசியம் குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக நடிகர் விவேக்கை வைத்து ‘மூன்றாம் கண்’ என்ற பெயரில் குறும்படம் தயாரிக்க சென்னை நகர போலீசார் திட்டமிட்டனர்.
இதற்காக நடிகர் விவேக்கை போலீசார் அணுகிய போது, அந்த குறும்படத்தை தனது மகன் சாய் பிரசன்னா அறக்கட்டளை சார்பில் சொந்த செலவில் தயாரித்து வழங்குவதாக தெரிவித்தார். அதன்படி அவர் ‘மூன்றாம் கண்’ விழிப்புணர்வு குறும்படத்தை தயாரித்தது மட்டுமின்றி, தனக்கே உரிய பாணியில் நகைச்சுவையுடன் சமூக அக்கறையை கலந்து நடிக்கவும் செய்திருந்தார்.
இதே போன்று சென்னை நகர போக்குவரத்து போலீசார் சார்பில் மின்னணு முறை அபராதம் வசூலிப்பு முறை குறித்து பெண் பைக் ரேசர் அலிஷா அப்துல்லாவை வைத்து தனியாக ஒரு குறும்படம் தயாரிக்கப்பட்டிருந்தது.
கமிஷனர் வெளியிட்டார்
இந்த 2 விழிப்புணர்வு குறும்படங்களின் குறுந்தகடு (சி.டி.) வெளியீட்டு விழா சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. விழாவுக்கு கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் தலைமை தாங்கினார். கூடுதல் கமிஷனர்கள் சாரங்கன், ஜெயராம், அருண் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நடிகர் விவேக், பெண் பைக் ரேசர், குறும்பட இயக்குனர்கள் ராகவன், கந்தன், அருண் பாலாஜி உள்ளிட்டோர் பங்கேற்றனர். விழாவில் 2 குறும்படங்களையும் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் வெளியிட்டார்.
விழாவில் அவர் பேசும்போது, ‘மக்கள் தங்களுடைய குடியிருப்பு பகுதிகளில் சாலை மற்றும் தெருக்களை நோக்கி ஒரு கேமராவை பொருத்தினால் 80 சதவீதம் இடங்கள் கண்காணிப்பு வளையத்துக்குள் வந்துவிடும். பொது இடங்களில் அரசு மற்றும் தன்னார்வலர்கள் மூலம் பொருத்தப்படும் கேமராக்கள் மூலம் மீதமுள்ள 20 சதவீதம் இடங்கள் வந்துவிடும்.’ என்றார்.
நடிகர் விவேக் பேச்சு
விழாவில் நடிகர் விவேக் பேசியதாவது:-
தமிழ்நாடு அரசுக்காக நான் ஏற்கனவே டெங்கிற்காகவும், குழந்தை தொழிலாளர்களுக்காகவும் நிறைய செய்து கொடுத்திருக்கிறேன்.
இன்றைக்கு சி.சி.டி.வி. கண்காணிப்பு கேமராக்கள் முக்கியமாக தோன்றியதால், தமிழ்நாடு காவல்துறைக்காக சம்பளமே இல்லாமல் நான் இந்த படத்தை தயாரித்தேன்.
இப்போது வருகிற தமிழ் படங்களும் குறும்படங்கள் போன்று தான் உள்ளது. வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமையை தாண்டுவது இல்லை.
என்னுடைய மகன் சாய் பிரசன்னா அறக்கட்டளை சார்பில் தயாரிக்கப்பட்ட இந்த குறும்படத்தை தமிழக காவல்துறைக்கு நான் அர்ப்பணிக்கிறேன்.
இவ்வாறு அவர் பேசினார்.
Related Tags :
Next Story