தூய்மை திருவள்ளூர் மாவட்டத்தை உருவாக்க பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும் கலெக்டர் வேண்டுகோள்


தூய்மை திருவள்ளூர் மாவட்டத்தை உருவாக்க பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும் கலெக்டர் வேண்டுகோள்
x
தினத்தந்தி 5 Aug 2018 4:00 AM IST (Updated: 5 Aug 2018 2:04 AM IST)
t-max-icont-min-icon

தூய்மை திருவள்ளூர் மாவட்டத்தை உருவாக்க பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும் என்று கலெக்டர் சுந்தரவல்லி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

திருவள்ளூர்,

திருவள்ளூரை அடுத்த கீழ்நல்லாத்தூர் ஊராட்சியில் ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித்துறை சார்பில் தூய்மை கணக்கெடுப்பு ஊரகம் 2018 ரதம் தொடக்கவிழா நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கு திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் சுந்தரவல்லி தலைமை தாங்கி பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது:-

திருவள்ளூர் மாவட்டத்தில் தூய்மை பாரத இயக்கத்தின் கீழ் தூய்மை கணக்கெடுப்பு ஊரகம்-2018 வருகிற 31-ந்தேதி வரை மாநிலம் மற்றும் மாவட்டங்களை ஊரக தூய்மை கணக்கெடுப்பு மூலம் தரவரிசை படுத்த உள்ளனர். இந்த ஆய்வு குறித்து ஊராட்சியில் சுகாதாரத்தை கடைபிடிக்கும் வகையில் குப்பைகள் மற்றும் கழிவு நீர் தெருக்களில் தேங்காத வண்ணம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். மகளிர் குழுக்கள் தங்களது கூட்டங்களில் கழிவறை கட்டுவதன் அவசியத்தை பற்றி விவாதிக்க வேண்டும். மகளிர் குழு உறுப்பினர்கள் சுகாதார விழிப்புணர்வு பேரணிகள் நடத்த வேண்டும்.

பொதுமக்களின் பங்களிப்பு

அனைத்து வீடுகளிலும் கழிவறைகள் பயன்படுத்த விழிப்புணர்வு ஏற்படுத்துதல் வேண்டும். பொது இடங்களில் குப்பைகள் மற்றும் கழிவுநீர் தேங்காத வண்ணம் தூய்மையாக வைத்துகொள்ள வேண்டும்.

வழிபாட்டு தலங்கள், பஸ் நிலையங்கள், ரெயில் நிலையங்கள் மற்றும் பொது இடங்களை தூய்மைப்படுத்தி வைத்துக்கொள்வதன் அவசியத்தை பொதுமக்களிடம் தெரிவிக்க வேண்டும். தூய்மை கணக்கெடுப்பு ஊரகம் 2018 திட்டத்தில் பொதுமக்களின் பங்களிப்பு 100 சதவீதம் இருக்க வேண்டும்.

இந்த பணியில் முழு ஈடுபாட்டுடன் செயல்பட்டு முழு சுகாதார தமிழகம், முன்னோடி தமிழகம் என்ற கூற்றின் அடிப்படையில் தூய்மையான திருவள்ளூர் மாவட்டத்தை உருவாக்க பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குனர் எஸ்.எஸ். குமார், கடம்பத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஸ்டாலின், அருள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Next Story