இன்று ஆடி கிருத்திகை: திருத்தணி முருகன் கோவிலில் பக்தர்கள் குவிந்தனர்
திருத்தணி முருகன் கோவிலில் ஆடி கிருத்திகை விழா இன்று நடக்கிறது.
திருத்தணி,
திருத்தணி முருகன் கோவிலில் ஆடி கிருத்திகை விழா இன்று நடக்கிறது. இந்த விழாவையொட்டி நேற்று முருகன் கோவிலில் அதிகாலையில் மூலவர் முருகபெருமானுக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடத்தப்பட்டு தங்ககவசம் அணிவிக்கப்பட்டு சிறப்பு வழிபாடு, பூஜைகள் நடத்தப்பட்டது.
மலர் காவடிகள்
இந்த விழாவில் அதிகாலை முதலே பக்தர்கள் மலர் காவடிகளுடன் வர தொடங்கினார்கள். அவர்கள் மலைக்கோவில் தேர் வீதியில் ஏற்பாடு செய்துள்ள சிறப்பு தரிசன வழிகளில் வரிசையில் சென்று முருக பெருமானை தரிசித்தனர்.
மேலும் கோவில் காவடி மண்டபத்தில் அமைக்கப்பட்டு இருந்த முருகபெருமான் சன்னதியில் தாங்கள் கொண்டு வந்த மலர் காவடிகளை செலுத்தினார்கள். பக்தர்கள் அலகு குத்தி வந்தனர். இன்று (ஞாயிற்றுக்கிழமை) ஆடி கிருத்திகை திருவிழா மற்றும் தெப்பத்திருவிழா நடக்கிறது.
சிறப்பு பஸ் வசதிகள்
இதையொட்டி சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது. பக்தர்களுக்கு சிறப்பு பஸ் வசதிகள் செய்யும் வகையில் திருத்தணியில் உள்ள அரக்கோணம் சாலை, சென்னை சாலை, திருப்பதி சாலை, சித்தூர் சாலை ஆகிய இடங்களில் தற்காலிக பஸ் நிலையங்கள் அமைக்கப்பட்டு உள்ளது.
திருத்தணி கோவில் நிர்வாகம் மற்றும் நகராட்சி சார்பில் பக்தர்களுக்கு தேவையான குடிநீர் வசதி, சுகாதார வசதி செய்யப்பட்டுள்ளது.
மேலும் கோவில் தேர் வீதியில் பக்தர்கள் சிரமம் இன்றி செல்ல பல்வேறு தரிசன வழிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. விழாவுக்கு தேவையான எற்பாடுகளை கோவில் தக்கார் ஜெயசங்கர், இணை ஆணையர் சிவாஜி ஆகியோர் செய்துள்ளனர்.
Related Tags :
Next Story