அதிகாரிகளின் பணி இடமாற்றம் மட்டுமே நடக்கிறது மாநிலத்தில் வளர்ச்சி பணிகள் நடைபெறவில்லை எடியூரப்பா குற்றச்சாட்டு


அதிகாரிகளின் பணி இடமாற்றம் மட்டுமே நடக்கிறது மாநிலத்தில் வளர்ச்சி பணிகள் நடைபெறவில்லை எடியூரப்பா குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 5 Aug 2018 3:30 AM IST (Updated: 5 Aug 2018 2:30 AM IST)
t-max-icont-min-icon

அதிகாரிகளின் பணி இடமாற்றம் மட்டுமே நடப்பதாகவும், மாநிலத்தில் வளர்ச்சி பணிகள் நடைபெறவில்லை என்றும் எடியூரப்பா குற்றச்சாட்டு கூறியுள்ளார்.

பெங்களூரு,

அதிகாரிகளின் பணி இடமாற்றம் மட்டுமே நடப்பதாகவும், மாநிலத்தில் வளர்ச்சி பணிகள் நடைபெறவில்லை என்றும் எடியூரப்பா குற்றச்சாட்டு கூறியுள்ளார்.

பெங்களூரு மாவட்ட பா.ஜனதா செயற்குழு நிர்வாகிகள் கூட்டம் மல்லேசுவரத்தில் உள்ள பா.ஜனதா அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பா.ஜனதா மாநில தலைவர் எடியூரப்பா பேசியதாவது:–

ஆட்சி நீடிக்க போவதில்லை

கர்நாடகத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் பா.ஜனதா 104 இடங்களில் வெற்றி பெற்றும் ஆட்சிக்கு வரமுடியாமல் போனது. ஆனால் நாடு சுதந்திர அடைந்த பின்பு தனிப்பெரும்பான்மை இல்லாமல் 37 எம்.எல்.ஏ.க்களை கொண்ட ஒரு கட்சி கர்நாடகத்தில் ஆட்சிக்கு வந்துள்ளது. 37 எம்.எல்.ஏ.க்களை மட்டும் வைத்து கொண்டு முதல்–மந்திரியாக குமாரசாமி இருந்து வருகிறார். 79 எம்.எல்.ஏ.க்களை வைத்துள்ள காங்கிரஸ் கட்சி, 37 எம்.எல்.ஏ.க்களை வைத்துள்ள ஜனதாதளம்(எஸ்) கட்சியுடன் கூட்டணி அமைத்துள்ளது.

முதல்–மந்திரி குமாரசாமி தான் எத்தனை நாட்கள் பதவியில் இருப்பேன் என்று தெரியாது என்று சொல்கிறார். ஒரு முதல்–மந்திரிக்கே தான் எத்தனை நாட்கள் பதவியில் இருப்பேன் என்று தெரியாத நிலை இருக்கிறது. இந்த கூட்டணி ஆட்சி நீண்ட நாட்கள் நீடிக்க போவதில்லை. பொதுப்பணித்துறை மந்திரி எச்.டி.ரேவண்ணா எல்லாத்துறைகளிலும் தலையிட்டு வருகிறார். அவரது செயல்பாடுகளால் மற்ற மந்திரிகள் அதிருப்தியில் உள்ளனர்.

வளர்ச்சி பணிகள் நடைபெறவில்லை

முதல்–மந்திரி குமாரசாமி பெங்களூரு, ராமநகருக்கு மட்டுமே செல்கிறார். மற்ற மாவட்டங்களுக்கு சுற்றுப்பயணம் செய்ய அவரால் முடியவில்லை. பெங்களூருவில் இருந்து கொண்டு அதிகாரிகளின் பணி இடமாற்றத்தில் மட்டுமே அவர் கவனம் செலுத்துகிறார். மாநிலத்தில் கூட்டணி ஆட்சிக்கு வந்த பிறகு வளர்ச்சி பணிகள் எதுவும் நடைபெறவில்லை. ஆட்சியை தக்க வைத்து கொள்ளவே குமாரசாமி போராடுகிறார். கூட்டணி ஆட்சியில் ஊழல் அதிகரித்து விட்டது.

பெங்களூரு மாநகராட்சியில் நடைபெறும் முறைகேடுகள் பற்றி தினமும் பத்திரிகைகளில் செய்திகள் வருகின்றன. அதுதொடர்பாக பா.ஜனதா தீவிர போராட்டம் நடத்தும். பா.ஜனதா 130 இடங்களில் வெற்றி பெற்றிருக்க வேண்டும். மாநில மக்களும் அதையே விரும்பினார்கள். ஆனால் நாம் செய்த தவறால் 104 இடங்களில் மட்டுமே வெற்றி பெற முடிந்துள்ளது. நாடாளுமன்ற தேர்தலில் 20 தொகுதிகளில் வெற்றி பெற்றே தீர வேண்டும். மீண்டும் நரேந்திர மோடியை பிரதமராக்க நாம் கடுமையாக உழைக்க வேண்டும்.

இவ்வாறு எடியூரப்பா கூறினார்.

இந்த கூட்டத்தில் மத்திய மந்திரி சதானந்தகவுடா, முன்னாள் துணை முதல்–மந்திரி அசோக் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


Next Story