தினம் ஒரு தகவல் : பசுமைச் சுவர் தாவரங்கள்


தினம் ஒரு தகவல்  : பசுமைச் சுவர் தாவரங்கள்
x
தினத்தந்தி 5 Aug 2018 11:31 AM IST (Updated: 5 Aug 2018 11:31 AM IST)
t-max-icont-min-icon

ஒரு காலத்தில் வீட்டுக்கு வீடு தோட்டம் அல்லது செடி, கொடிகளாவது இருக்கும். ஆனால் இன்றோ நிலைமை மாறிவிட்டது.

சிறிய அளவில் இடம் இருந்தால் அங்குக்கூட கட்டிடத்தை கட்டிவிடுகிறார்கள். அதனால் வீடுகளில் தோட்டங்கள் அமைப்பதே இன்று குறைந்துவிட்டது.

பசுமையை விரும்புகிறவர்கள் மாடித்தோட்டத்தோடு ஆறுதல்பட்டுக்கொள்ள வேண்டியிருக்கிறது. தோட்டம் குறித்து கவலைப்படுவோருக்கு வெர்ட்டிகல் கார்டன், கிரீன் வால் எனப்படும் பசுமைச் சுவர் தாவரங்கள் வந்துவிட்டன.

இந்த முறையில் தோட்டம் வைக்க இடம் இல்லையே என்ற கவலையே வேண்டாம். வீட்டுச் சுவர்களிலேயே செடி, கொடிகளைப் படரவிட்டு வளர்க்கலாம். சுவர்களில் மணி பிளாண்ட் போன்ற செடிகளை தொங்கவிட்டு வளர்க்கலாம். பசுமைச் சுவர் தாவர முறைக்கு மேலை நாடுகளில் மிகுந்த வரவேற்பு உண்டு. இப்போது நம் நாட்டிலும் வரவேற்பு கூடியிருக்கிறது. சுவர்களில் மட்டுமல்ல, முழு அடுக்கு மாடியிலும்கூட இப்படி விதவிதமான செடிகளை வளர்க்கலாம். வீட்டு தூண்களில் அலங்கார செடி, கொடிகளைப் படரவிடலாம் எனச் சொல்கிறார்கள் கட்டுமான பொறியாளர்கள்.

இப்படிப் பசுமைச் சுவர்களை எழுப்ப திட்டம் இருந்தால், இதுகுறித்து முன்கூட்டியே கட்டிட பொறியாளரிடம் தெரிவித்துவிட வேண்டும். அப்படிச் சொல்லிவிட்டால் வெர்ட்டிகல் கார்டன், கிரீன் வால் அமைக்க கட்டுமானத்தின் போதே வசதி செய்துவிடுவார்கள். இத்தகைய பசுமைச் சுவர் தாவரங்களை அமைப்பது மிகவும் எளிமையான கட்டுமான முறையாகும். ஆனால் சுவரில் செடி, கொடிகளை எப்படி வளர்க்க முடியும் என்று சந்தேகம் ஏற்படலாம். இதற்காக ரொம்பவும் மெனக்கெட தேவையில்லை. வீட்டின் கட்டுமான பணியின்போது சாதாரணச் சுவர்களுடன் சேர்த்து மணல் நிரப்பும் வகையிலான கட்டுமானங்களை அமைத்தாலே போதும். பின்னர் அவற்றில் மணலை நிரப்பிச் செடிகளை நட்டு வளர்க்கலாம்.

பசுமைத் தாவரங்களை உள்ளடக்கிய சுவர் இன்று அலங்கார பொருளாகவும் பார்க்கப்படுகிறது. இது வெப்பத்தின் தாக்கத்தை உணர முடியாத அளவுக்கு பசுமை கலந்த சூழலை உருவாக்கவும் செய்கிறது. இதனால் நல்ல காற்றோட்ட வசதியும் கிடைக்கும். வெளிப்புறச் சுவர்களில் அமைக்கப்படும் பசுமைச் சுவர் தாவரங்கள் கோடை காலத்தில் உஷ்ணத்தை உள்வாங்கி வீட்டில் வசிப்பவர்களுக்குக் குளிர்ச்சியான சூழ்நிலையை அளிக்கிறது. 

Next Story